உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பு தடுக்கக்கோரி அதிகாரியிடம் புகார்

கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பு தடுக்கக்கோரி அதிகாரியிடம் புகார்

அம்பத்துார், கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை கமிஷனரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளிக்கப்பட்டது. அம்பத்துார் மண்டல கவுன்சிலர் கூட்டம், மண்டலக்குழு தலைவர் மூர்த்தி தலைமையில் மண்டல கூட்டரங்கில், நேற்று நடந்தது. இதில், சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை கமிஷனர் கவுசிக், அம்பத்துார் தாசில்தார் விக்ரம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய 82வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரமேஷ், தெரு நாய்களுக்கான கருத்தடை பணி, அம்பத்துார் மண்டலத்தில் துவங்கி விட்டதா என, கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அதிகாரிகள், அம்பத்தூர் மண்டலத்தில், நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி விரைவில் துவங்கி நடைபெறும் என தெரிவித்தனர். அப்போது மாதத்திற்கு, 1,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், இக்கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் சிலர், துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தின் இடையே, தெருக்களில் குப்பை தேங்காதபடி அதிகாரிகள் திறம்பட செயல்பட்டதாக என தெரிவித்தனர். பின், கூட்டம் முடிந்து வெளியே வந்த சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை கமிஷனர் கவுசிக்கை சூழ்ந்த, கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தினர், தேசிய பசுமை தீரப்பாயத்தின் உத்தரவை, சென்னை மாநகராட்சி மீறுவதாகவும், உடனடியாக கமிட்டி அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். அவர்களிடம் பேசிய துணை கமிஷனர் கவுசிக், 'தான் இடமாறுதல் பெற்று, இப்பகுதிக்கு வந்து சில வாரங்களே ஆனதாகவும், அதனால் கொரட்டூர் ஏரி குறித்த விஷயம் முழுமையாக தெரியாது' என தெரிவித்தார். மேலும், இது குறித்து மண்டல அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை