உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓ.எம்.ஆரில் கழிவுநீர் தேக்கத்தால் நெரிசல் குழாய் உடைப்பை சீர்செய்வதில் குழப்பம்

ஓ.எம்.ஆரில் கழிவுநீர் தேக்கத்தால் நெரிசல் குழாய் உடைப்பை சீர்செய்வதில் குழப்பம்

துரைப்பாக்கம், ஓ.எம்.ஆர்., சாலையில், சோழிங்கநல்லுாரில் இருந்து டைடல் பார்க்; ரேடியல் சாலையில் இருந்து டைடல் பார்க் மற்றும் சோழிங்கநல்லுார் செல்லும் வாகனங்கள் சந்திக்கும் பகுதியாக துரைப்பாக்கம் உள்ளது.இந்த சந்திப்பில், மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், இரண்டு ஆண்டுகளாக வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு முன், இந்த சந்திப்பில், மெட்ரோ ரயில் பணியின் போது, பிரதான கழிவுநீர் குழாய் உடைந்தது.இதனால், திரும்பும் இடத்தில் கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மேலும், கழிவுநீர் தேங்கிய பகுதியில் இருந்து, வாகனங்கள் வலது பக்கம் திரும்பிச் செல்வதால், சாலை குறுகி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அதேபோல், ஓ.எம்.ஆர்., மத்திய கைலாஷ் சந்திப்பில், கிண்டி நோக்கி திரும்பும் பகுதியில், மேம்பாலம் கட்டுமானப் பணியால், குழாய் உடைந்து கழிவுநீர் தேங்கியுள்ளது.இதனால், ஓ.எம்.ஆர்., அடையாறில் இருந்து, கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் கடுமையான நெரிசலில் சிக்குகின்றன.சேவை துறை சாலையில் பள்ளம் எடுக்கும் போது ஏற்படும் குழாய் சேதங்களை, அந்தந்த சேவை துறைகளே சரிசெய்து கொடுக்க வேண்டும்.அதுமட்டுமின்றி, குடிநீர் வாரிய அதிகாரிகள் மேற்பார்வையில் தான் பள்ளம் எடுக்க வேண்டும் என, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.ஆனால், எந்த சேவை துறையும், இந்த உத்தரவை கடைப்பிடிப்பதில்லை. குழாய் சேதமடைந்தாலும், அதை உடனே சரி செய்வதில்லை.மெட்ரோ ரயில் மற்றும் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் தானே குழாயை சேதப்படுத்தியது, அவர்களே சரி செய்யட்டும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் ஒதுங்கிக் கொள்கின்றனர்.அதே போல், குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு, மெட்ரோ ரயில் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் ஒதுங்கிக் கொள்கின்றனர்.குழாய் உடைப்பை சரி செய்வது யார் என, துறை அதிகாரிகளுக்குள் குழப்பம் நீடிப்பதால், கழிவு நீர் பிரச்னை ஒரு வாரமாக நீடித்து வருகிறது.உயர் அதிகாரிகள் தலையிட்டு, துரைப்பாக்கம் மற்றும் மத்திய கைலாஷ் பகுதியில் நிலவும் நெரிசலுக்கு காரணமான கழிவுநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை