உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துாய்மை பணியாளர்களுக்கு அடுத்த சலுகை தினமும் ரூ.769 நெருக்கடியை சமாளிக்க மாநகராட்சி அறிவிப்பு

துாய்மை பணியாளர்களுக்கு அடுத்த சலுகை தினமும் ரூ.769 நெருக்கடியை சமாளிக்க மாநகராட்சி அறிவிப்பு

சென்னை : துாய்மை பணியாளர் பிரச்னை பெரிதாகி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில், மூன்று வேலையும் உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்த மாநகராட்சி, சட்டசபை தேர்தலை கருத்தில் வைத்து, துாய்மை பணியாளர்களின் சம்பளத்தையும், 585 ரூபாயில் இருந்து, 769 ரூபாயாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. சென்னையில், ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் துாய்மை பணியை, தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்தது. மாநகராட்சியின் இந்த முடிவுக்கு, அந்த மண்டலங்களில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் பணியாற்றிய, 2,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தனியார் நிறுவனத்தில் சேர்ந்தால் ஊதியம் குறைவு, பணி பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன், ஆகஸ்டில், 13 நாட்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி, துாய்மை பணியாளர்கள் வலுக்கட்டயமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து மே தின பூங்கா, மெரினா கடற்கரை, ரிப்பன் மாளிகை அருகே என, தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு மட்டும் தினக்கூலி, 769 ரூபாய் வழங்கப்படும் என, மாநகராட்சி அறிவித்தது. இந்த அறிவிப்புக்குபின், 800க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். அதேநேரம் மற்ற மண்டலங்களில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு, 585 ரூபாய் தினக்கூலி வழங்கப்பட்டு வருகிறது. அதனால், மற்ற மண்டல துாய்மை பணியாளர்களும், தங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என, மாநகராட்சியிடம் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து துாய்மை பணியாளர்களுக்கும் தினக்கூலி உயர்த்தப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியின்போது, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட மாநகராட்சி மண்டலங்களில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு, 585 ரூபாய் தான் தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. அவற்றை, 769 ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளோம். வரும் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அடுத்த மாதம் முதல் தினக்கூலி உயர்த்தப்படும். இதனால், ஒவ்வொரு துாய்மை பணியாளர்களுக்கும் மாதம், 20,000 ரூபாய்க்கு மேல் ஊதியம் கிடைக்கும். துாய்மை பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டத்திற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. திட்டத்தை முதல்வர் விரைவில் துவக்கி வைப்பார். மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்புக்கான பணிகள் நடந்து வருகிறது. தாழ்வான பகுதிகளில், மழைநீர் தேக்கத்தை தடுக்க மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சென்னை மாநகராட்சியில் துாய்மை பணியாளர் பிரச்னை பெரிதாகி, சென்னை உயர்நீதிமன்றம் பிரச்னை சென்றது. இந்த விவகாரத்தில் அரசின் அணுகுமுறை, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. நிலைமையை சமாளிக்கும் வகையில், துாய்மை பணியாளர்களுக்கு மூன்று வேலையும் உணவு வழங்கும் திட்டத்தை, மாநகராட்சி அறிவித்தது. இதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலும் சில மாதங்களில் வர உள்ளது. இந்த சூழலில், துாய்மை பணியாளர்கள் விவகாரத்தை கட்டுப்படுத்தவும், அவர்கள் மீண்டும் போராட்ட களத்திற்கு வராமல் தடுக்கும் வகையில், தற்போது சம்பள உயர்வை மாநகராட்சி அறிவித்துள்ளது. குப்பை சேகரித்த 128 பேருக்கு தனியார் நிறுவனத்தில் பணி கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், 308 பேர் குப்பையிலிருந்து கிடைக்கும் பொருட்களை எடுத்து விற்று பிழைப்பு நடத்தி வந்தனர். இவர்களில், 128 பேருக்கு, மாநராட்சி ஒப்பந்த நிறுவனத்தில் துாய்மை பணிக்கான நியமன ஆணைகளை, மாநகராட்சி மேயர் பிரியா நேற்று வழங்கினார். இதன் மூலம், அவர்களுக்கு மாதம், 23,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்கும். இதேபோல், குப்பை கிடங்குகளில் பிழைப்பு நடத்தி வரும், 1,000 பேருக்கு புதுவாழ்வு அளிக்கப்படும் என, மேயர் பிரியா கூறினார். நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ