மாநகராட்சி கவுன்சிலர் சாரதா தி.மு.க.,வில் இருந்து நீக்கம்
சென்னை, சென்னை மாநகராட்சி 65வது வார்டு தி.மு.க., பெண் கவுன்சிலர் சாரதா, கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.சென்னை மாநராட்சி, கொளத்துார் தொகுதியில் அடங்கிய, 65வது வார்டு பெண் கவுன்சிலர் சாரதா. இவர், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க., மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளராக உள்ளார்.சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, அதிகாரிகளும் ஏற்கனவே புகார் அளித்திருந்தனர். கட்டுமான பணிகளில் தலையிட்டு, 'கல்லா' கட்ட முயன்றதாக குற்றச்சாட்டு இருந்தது.இதுபோன்ற பல்வேறு புகார்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடம் இருந்து, அரசுக்கும், கட்சி தலைமைக்கும் பறந்தன.ஏற்கனவே, கட்சி தலைமையிலிருந்து, சாரதாவுக்கு எச்சரிக்கை விடுத்தும், தொடர்ந்து அவர் மீது புகார்கள் குவிந்தன.அவர் மீது நடவடிக்கை எடுக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, சாரதா, கட்சியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ளார்.