சிசிடிவிக்களை சேதப்படுத்திய லாரியை தேடும் மாநகராட்சி
வேளச்சேரி: வேளச்சேரியில், இரும்பு தடுப்பில் மோதி, கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய, 'ரெடிமிக்ஸ்' லாரியை மாநகராட்சி அதிகாரிகள் தேடி வருகின்றனர். வேளச்சேரி ரயில் நிலையம் எதிரே உள்ள சாலையில், அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால், கனரக வாகனங்கள் செல்ல முடியாத வகையில், இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது. நேற்று, இந்த சாலையில், 'டி.என்., 12 பி.க்யூ., 1945' என்ற பதிவெண் கொண்ட ரெடிமிக்ஸ் லாரி, அதிவேகமாக சென்று, அந்த இரும்பு தடுப்பில் மோதியது. இந்த விபத்தில், தடுப்பு வளைந்ததுடன், அங்கு மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள், கேபிள்கள் சேதமடைந்தன. இதுகுறித்து, அங்கிருந்த மக்கள் தட்டிக்கேட்ட போது, லாரி ஓட்டுநர் அலட்சியமாக பதில் கூறிவிட்டு, லாரியை எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில், கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய லாரியை தேடி வருவதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.