அஸ்தினாபுரம் பஸ் நிலையத்தில் காட்டன் சூதாட்டம் ஜோர்
குரோம்பேட்டை, குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் பேருந்து நிலையத்தில், சமீபத்தில் நிழற்குடை கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணியர் பயன்படுத்தும் இப்பேருந்து நிலையத்தில், காட்டன் சூதாட்டம் வெட்ட வெளிச்சமாக நடப்பதாக, பயணியர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.கழிப்பறை கட்டடம் அருகே, மர்ம நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அன்றாட கூலி வேலைக்கு செல்வோர், கூட்டம் கூட்டமாக கூடி, காட்டன் சூதாட்டத்தில் பணம் கட்டுகின்றனர்.பலர், வேலைக்கு செல்லாமல் அங்கேயே காத்திருக்கின்றனர். இதனால், பெண் பயணியர் நிலையத்திற்குள் செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும், சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மது அருந்திவிட்டு, ரகளையிலும் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.பேருந்து நிலையம் ஓரம், சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தின் உதவி மையம் இருந்தும், அங்கு பணியில் இருக்கும் போலீசார், பேருந்து நிலையத்தில் நடக்கும் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை என, பயணியர் குமுறுகின்றனர்.எனவே, தாம்பரம் போலீஸ் கமிஷனர் தலையிட்டு, அஸ்தினாபுரம் பேருந்து நிலையத்தில் நடக்கும் காட்டன் சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.