சென்னை,சென்னை மாநகராட்சியில், மழைநீர் வடிகால்களில் 45 இடங்களில் இணைப்பு பணிகள் முடியாததால், அக்., 15ம் தேதிக்குள் முடிக்க, மண்டல அலுவலர்களுக்கு, மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். மேலும், கடந்தாண்டு மழை வெள்ளத்தில் பாதித்த, 180 இடங்களில் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.வடகிழக்கு பருவமழையையொட்டி, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து, மண்டல வாரியாக மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில், கோவளம், கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் விடுபட்ட இடங்களில் அமைக்கப்படும் மழைநீர் வடிகால் பணிகள், வண்டல் வடிக்கட்டி தொட்டிகளில் கழிவு அகற்றும் பணி, சாலை வெட்டு பணி, சேதமடைந்த சாலைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.அத்துடன், கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய இடங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், மண்டல வாரியாக தகவல் கேட்கப்பட்டது.இந்த கூட்டம் குறித்து, மாநகராட்சி மேயர் பிரியா பேசியதாவது:தாழ்வான பகுதிகளில், தேவையான மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.மழைக்காலத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக விழும் நிலையில் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள், அதன் கிளைகளை அகற்ற வேண்டும்.நீர்வளத்துறை மற்றும் ரயில்வே துறையின் பராமரிப்பில் உள்ள, கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணி, 22சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது, 45 இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. 10 அல்லது 15 அடி நீளத்தில் தான் இணைப்பு வழங்க வேண்டும் என்பதால், அக்., 15ம் தேதிக்குள் இணைப்பு வழங்க வேண்டும்.கடந்த காலங்களில், 180 இடங்களில் மழைநீர் தேக்கம் இருந்தது. அந்த இடங்களில், மழைநீர் வடிகால் மற்றும் பாதிப்புக்கான காரணம் கண்டறிந்து தீர்வு காணப்பட்டுள்ளது. எனினும், அப்பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.மெட்ரோ ரயில் பணி நடக்கும் பகுதிகளில், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களாக, 25 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு, மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.கடந்த காலங்களில் ஒருங்கிணைந்த சமையற்கூடம் செயல்பட்டு வந்தது. அவற்றால், ஓரிடங்களில் உணவு பற்றாக்குறையும், மற்றொரு இடத்தில் வீணாகியும் வந்தது.இவற்றை தவிர்க்கும் வகையில், 400 நிவாரண முகாம்களில், அங்கேயே உணவு தயாரித்து வழங்குவதற்கான பொருட்கள் வழங்கப்பட்டு மற்றும் சமையல்காரர்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டும். இதனால், ஒரு முகாமில் 50 பேர் தங்கினால், அவர்களுக்கான உணவு மட்டுமே தயாரித்து வழங்கப்படும்.அதேபோல், தாழ்வான பகுதிகளுக்கு, 100 மோட்டார்கள், 36 படகுகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து, நிவாரண பணிகளில், 10,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.வடகிழக்கு பருவமழைக்கு மாநகராட்சி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகிறது.பொதுமக்கள், மழை தொடர்பான புகார்கள் தெரிவிக்க, '1913' என்ற தொலைபேசி எண்ணில், 150 கூடுதல் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.மேலும், 94455 51913 என்ற வாட்ஸாப் எண்ணிலும் புகார் மற்றும் தகவல்கள் அளிக்கலாம்.இவ்வாறு அவர் பேசினார்.
மண்டலங்களில் எங்கெல்லாம் பாதிப்பு?
பெருங்குடி: மடிப்பாக்கத்தில் இருந்து, மழைநீர் வெளியேறும் வழித்தடமாக உள்ள கைவேலி கால்வாய்கள் துார்வாரி சீரமைக்காததால், வழக்கம்போல இந்தாண்டும் ராம் நகர், சதாசிவம் நகர், குபேரன் நகர் உள்ளிட்ட பகுதிகள், பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.அடையாறு: வேளச்சேரியில் டான்சிநகர், விஜயநகர், தரமணியில் பெரியார் நகர், கிண்டியில் ஈக்காட்டுதாங்கல் பகுதியில் சில இடங்களில், வடிகால் இணைப்பு இல்லாமல் உள்ளது. கடந்தாண்டு, மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் இவை.சோழிங்கநல்லுார்: துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுாரில் சில தெருக்களில் கட்டிய வடிகால்கள், பிரதான கால்வாயுடன் இணைக்கப்படவில்லை.திருவொற்றியூர்: பகிங்ஹாம் கால்வாயுடன் இணையும் பிரதான கால்வாய்களுக்கு, நான்கு இடங்களில் மதகுகள் அமைக்கும் பணி இன்னும் துவங்கவில்லை. ஒவ்வொரு மழைக்கும், பகிங்ஹாம் கால்வாயில் அதிகளவில் நீர் செல்லும்போது, கடல் உள்வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டால், 'ரிவர்ஸ்'சில் தண்ணீர் வந்து, சுற்றுப்புற பகுதிகளை சூழும் நிலை உள்ளது.மணலி: எட்டு வார்டுகளை உள்ளடக்கிய மணலி மண்டலத்தில், கொசஸ்தலை வடிநில திட்டத்தின் கீழ், 120 கி.மீ., நீளம் மழைநீர் வடிகால்கள் அமைக்க வேண்டும்.இதில், பாடசாலை தெரு - ஈ.வெ.ரா., பெரியார் தெரு சந்திப்பு உட்பட, எட்டு இடங்களில், மழைநீர் வடிகால் இணைப்பு பணி பாக்கியுள்ளது.மழைநீர் வடிகால் வசதி முழுதும் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மழைநீர் தானாக வடிவதற்கான கூறுகள் உள்ளன. ஊருக்குள் மழைநீர் தேங்கினால், நிச்சயம் வடியும். ஆனால், புழல், கொசஸ்தலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்தால், அதை சமாளிப்பது கஷ்டம் என்கின்றனர், இப்பகுதி மண்டல அதிகாரிகள்.கோடம்பாக்கம்: விருகம்பாக்கம் 128வது வார்டில், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், விருகம்பாக்கம் சுடுகாடு வழியாக, நெற்குன்றத்தில் உள்ள விருகம்பாக்கம் கால்வாய்க்கு செல்ல வேண்டும். இதற்கு போதிய இணைப்பு இல்லை.அதேபோல், ரெட்டி தெருவில் இருந்து காமராஜர் சாலை இணையும் பகுதியில், மழைநீர் வடிகால் இணைப்பிற்கு பதில், குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. அதிகளவில் தண்ணீர் வரும் போது, குழாய் கொள்ளளவு தாங்காமல் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. வளசரவாக்கம்: ராமாபுரம், திருவள்ளுவர் சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளவில்லை. ராமாபுரம் பாரதிசாலையில் உள்ள மழைநீர் வடிகால், 100 மீட்டர் துாரத்திற்கு குடிநீர் வாரிய பணிகளால் உடைந்துள்ளது. ஆலப்பாக்கம் பிரதான சாலை மழைநீர் வடிகாலில் 110 மீட்டர் துாரத்திற்கு மழைநீர் வடிகால், இணைக்கப்படாமல் உள்ளது. திரு.வி.க.நகர்: 65வது வார்டில் மழைநீர் வடிகால்வாயில் இணைப்பு கால்வாய் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. விவேகானந்தா சாலையில், தற்போது தான் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.தாம்பரம் மாநகராட்சி: தாம்பரம் மாநகராட்சி, பம்மல் ஸ்டேட் பாங்க் காலனியில் இருந்து ஆண்டாள் நகர், மூவர் நகர் வழியாக அடையாறு ஆற்றை இணைக்கும் வகையில் மூடுகால்வாய் கட்டப்பட்டது. இக்கால்வாயை இணைக்காமல் பாதி பாதியாக கட்டி அப்படியே விட்டு விட்டனர்.வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணி குறித்த ஆலோசனை கூட்டம், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நடந்தது.இதில், அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:பிரதான நெடுஞ்சாலைகளான பம்மல் - திருநீர்மலை சாலை, பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை, அஸ்தினாபுரம்- திருமலை நகர் முதல் பிரதான சாலை பல்லாவரம் பகுதி, தாம்பரம் - வேளச்சேரி சாலைகளிலும், ஆங்காங்கே கால்வாய் இணைப்பு இன்றி, பாதி பாதியாக நிற்கிறது. இப்பகுதிகளில் விடுபட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சிறுபாலங்கள், வடிகால்வாய்கள், நீர்வழிப்பாதைகளில் தடையின்றி வெள்ளநீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும். பிரதான சாலைகளில் நடந்து வரும் மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.
மண் குவியல்கள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால், அவ்வாறு எடுக்கப்படும் சகதி, மண்ணை சாக்கு பையில் கட்டி வடிகால் அருகில் வைத்து செல்கின்றனர். அதை அகற்ற 15 நாட்கள் வரை ஒப்பந்ததாரர்கள் அவகாசம் எடுத்துக் கொள்கின்றனர். அதற்குள் மழை பெய்தால், சாக்கு பை நைந்து, மழைநீர் வடிகாலில் மண் விழுந்து மீண்டும் அடைப்பு ஏற்படுத்துகிறது; அதனால் வெள்ளப் பாதிப்பு தொடர்கதையாகிறது.