வடிகால் பணிக்கு மின் கம்பங்கள் இடையூறு அதிகாரிகள் மீது கவுன்சிலர் குற்றச்சாட்டு
வளசரவாக்கம், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், அரசு சார்பில் மக்கள் குறைகளை தீர்க்க நடத்தப்படுகிறது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் பெயரை வைத்து, அரசு பணத்தில் விளம்பரம் தேடுகின்றனர் என, அ.ம.மு.க., கவுன்சிலர் பேசினார்.வளசரவாக்கம் மண்டல குழு கூட்டம், மண்டல தலைவர் ராஜன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மண்டல உதவி கமிஷனர் பானுகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:ஸ்டாலின் 144வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: மதுரவாயல் கூவம் கரையோரம் தனியார் ஆக்கிரமிப்பில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. அதை அகற்ற வேண்டும். வார்டில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. அதற்கு உரிய தீர்வு காண வேண்டும். ரமணி மாதவன், 147வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்:வீடு வீடாக செல்லும் போது, ஏன் அடிக்கடி சாலையை தோண்டி போடுகிறீர்கள், மின் தடை ஏற்படுகிறது என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு மக்கள் குறைகூறாதபடி, அதிகாரிகள் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.கிரிதரன், 148 வது வார்டு அ.ம.மு.க., கவுன்சிலர்:'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அரசு செலவில் மக்கள் குறைதீர்க்க அமைக்கப்படுகிறது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டியிருப்பது, மக்கள் பணத்தில் கட்சிக்கு விளம்பரம் தேடுவதாக உள்ளது.நெற்குன்றத்தில் உள்ள சுகாதாரம் மற்றும் நல மையத்தில் மருந்துகள் இல்லை. நெற்குன்றம் ஆரம்ப சுகாதார மையத்தில், ஸ்கேன் இயந்திரம் உள்ளது. ஆனால், ஸ்கேன் எடுக்க ஆள் இல்லாததல், பயனாளிகள் வெளியே செல்ல வேண்டியுள்ளது.ஹேமலதா, 150வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்:போரூரில் சி.வி.கே., தெருவில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருகிறது. இங்கு மின் வாரிய மின் கம்பங்கள் மழைநீர் வடிகால் குறுக்கே உள்ளது.அதை மாற்றி அமைக்க கிரைன் மற்றும் ஆட்கள் வழங்கியும், மின் வாரிய அதிகாரிகள் மின் கம்பத்தை மாற்றி அமைக்க முன் வரவில்லை. இதனால், மழைநீர் வடிகால் பணிகள் பாதிக்கப்படுகின்றன.பாரதி, 152வது வார்டு தி.மு.க.:என் வார்டில், கடந்த சில நாட்களாக குடிநீர் வருவதில்லை. சாலையில் மறுபுறம் உள்ள 149வது வார்டில் குடிநீர் வருகிறது. எனவே, மாற்று ஏற்பாடாக லாரி குடிநீர் வழங்க வேண்டும். எங்கள் பகுதியில் செவிலியர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், தடுப்பூசி போடுவதில் சிக்கல் உள்ளது. ரேபிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க, தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சத்யநாதன் 145வது வார்டு அ.தி.மு.க.:கடந்த முறை என் வார்டில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் நடந்தபோது, மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க வந்த சில மகளிரிடம், 'உங்களுக்கு இந்த திட்டம் கிடையாது, வெளியே போங்கள்' என, தனி நபர் பேசினார்.அதை நான் தட்டிக்கேட்ட போது, கைகலப்பானது. எனவே, இம்முறை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கும் போது எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.