அரும்பாக்கம், சென்னை மாநகராட்சி சார்பில், 15 மண்டலங்களிலும் கழிப்பறைகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறின. இதற்காக, பல கோடியில் 'இ - டாய்லெட்' எனும் எலக்ட்ரானிக் கழிப்பறைகள் சாலையோரங்கள், பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டன. அவையும் மக்களிடம் பெரிய வரவேற்பை பெறமால் பழுதடைந்தன.தற்போது, 'சிங்கார சென்னை' திட்டத்தில், மக்களின் வசதிக்கேற்ப மேம்படுத்தப்பட்ட அறைகளுடன் கூடிய, ஒப்பனை அறைகளாக கழிப்பறைகள் கட்டப்பட்டன.பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இவ்வகையான கழிப்பறைகளும், முறையாக பராமரிக்காமல் வழக்கம் போல் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கத் துவங்கி உள்ளன.குறிப்பாக, அண்ணா நகர் மண்டலம், 105வது வார்டில், அரும்பாக்கம், பெருமாள் கோவில் தெரு உள்ளது. இங்குள்ள, சாலையோரத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக, கடந்த வாரம் புதிதாக ஒப்பனை அறை திறந்து வைக்கப்பட்டது.ஒரே வாரத்தில் மோட்டார் பழுதடைந்து தண்ணீரின்றி கழிப்பறை மூடப்பட்டது. தற்போது, மாடுகள் கட்டி வைக்கப்படும் தொழுவமாக மாறி வருகின்றன. இதனால், அப்பகுதிவாசிகள் கவுன்சிலர் மற்றும் மாநகராட்சியின் மீது அதிருப்தியில் உள்ளனர்.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'ஆண்டுதோறும் கழிப்பறைக்காகவே பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அவற்றை முறையாக பயன்படுத்துவதும் கிடையாது; பராமரிப்பதும் கிடையாது. அரும்பாக்கத்தில் ஒரே வாரத்தில், ஒப்பனை அறை இழுத்து மூடப்பட்டது. அரசு இதை கவனத்தில் வைத்து, வரிப்பணத்தை வீணடிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.