உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

காரில் ஆட்டோ மோதி ஓட்டுநர் பலி ஆலந்துார்: வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் டோராபள்ளி ரவி, 54; ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம், ஜி.எஸ்.டி., சாலையில் தாம்பரத்தில் இருந்து கிண்டி நோக்கி, ஆட்டோவில் சென்றார். ஆலந்துார், ஹெச்.பி., பெட்ரோல் ‘பங்க்’ எதிரில், முன்னால் சென்ற மாருதி ஸ்விப்ட் டிசையர் காரில் மோதியதில், ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் இறந்தது தெரிய வந்தது. பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். பைக்கில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு நந்தம்பாக்கம்: புழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 29. இவர், கடந்த 5ம் தேதி ‘ராயல் என்பீல்டு’ புல்லட் பைக்கில் நந்தம்பாக்கம், டிபன்ஸ் காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அங்கிருந்த வேகத்தடை மீது பைக் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார். பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர். கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை கொரட்டூர்: ஜெ.ஜெ.நகர், புகழேந்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்மோகன், 35. இவர், தாய் மற்றும் இரண்டு சகோதரியருடன் வசித்து வந்தார். 8 லட்சம் ரூபாய் வரை கடன் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்தவர், கருக்கு மேம்பாலத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றுள்ளார். அங்கிருந்து கீழே குதித்தார். அந்நேரம், சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி சென்ற விரைவு ரயில் மோதி உயிரிழந்தார். பெரம்பூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். லாரி ஓனரிடம் மாமூல் கேட்ட ரவுடி கைது வியாசர்பாடி: திருவேற்காடு, பராசக்தி நகரைச் சேர்ந்தவர் உதயகுமார், 40; லாரி உரிமையாளர். அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்த வியாசர்பாடி, காந்திபுரத்தை சேர்ந்த பார்த்தசாரதி, 50 என்பவர், இவரிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். மேலும், லாரிகளில் உள்ள டீசல், பேட்டரி போன்றவற்றை திருடி வந்துள்ளார். இது குறித்து உதயகுமார் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் மூலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கடந்த 20ம் தேதி வியாசர்பாடி கூட்ஸ்ஷெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உதயகுமாரின் லாரியின் கண்ணாடியை, பார்த்தசாரதி அடித்து உடைத்துள்ளார். விசாரித்த வியாசர்பாடி போலீசார், நேற்று முன்தினம் பார்த்தசாரதியை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே ஏழு வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ