உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர்

புழல் ஏரியில் நீச்சல் பழகியவர் பலி

செங்குன்றம்: செங்குன்றம் அப்துல் மரைக்காயர் தெருவை சேர்ந்தவர் முகமது யாசின், 39. மாநகர போக்குவரத்து கழக ஊழியர். நேற்று காலை, நண்பருடன் புழல் ஏரியில் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தார். அப்போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, முகமது யாசின் நீரில் மூழ்கி பலியானார். தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்பு துறையினர், ஏரிக்கு சென்று சடலத்தை மீட்டனர். செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மசாஜ் சென்டரில் விபச்சாரம் 4 பெண்கள் மீட்பு

தாம்பரம்: மேற்கு தாம்பரம், முடிச்சூர் சாலையில், விபின்ராஜ் என்பவர் அரோமா ஆயுர்வேத மசாஜ் சென்டர் நடத்தி வந்தார். இந்த மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக, தாம்பரம் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று முன்தினம் ரகசியமாக சென்று விசாரித்ததில், விபின்ராஜ், பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த நான்கு பெண்களை மீட்ட போலீசார், மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். முக்கிய குற்றவாளியான விபின்ராஜை தேடி வருகின்றனர்.

தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி பச்சிளம் குழந்தை பலி

ஆவடி: ஆவடி அடுத்த ஆயில்சேரி, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீனிவாசன், 35 - பிரைசி, 28. தம்பதிக்கு, மூன்று நாட்களுக்கு முன், தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, பிரைசி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். அப்போது குழந்தைக்கு புரையேறி, சிறிது நேரத்தில் குழந்தை அசைவற்று கிடந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த தம்பதி, குழந்தையை ஆவடி அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு, மருத்துவ பரிசோதனையில் குழந்தை இறந்தது தெரிந்தது. பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ