மேலும் செய்திகள்
கிரைம் கார்னர்
28-Oct-2025
வீடு புகுந்து திருடியவர் சிக்கினார் கொளத்துார்: வில்லிவாக்கம், வடக்கு ஜெகன்னாதன் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் நிரஞ்சன், 20; கல்லுாரி மாணவர். கடந்த 25ம் தேதி பாலாஜி, சிதம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சி சென்று விட்டார். அன்று மாலை நிரஞ்சன் கல்லுாரி முடித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த 50,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது. ராஜமங்கலம் போலீசாரின் விசாரணையில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த உதயகுமார், 20, என்பவர், திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் மீது ஆறு குற்ற வழக்குகள் உள்ளன. 4 ஆட்டோ கண்ணாடி உடைப்பு பேசின்பாலம்: புளியந்தோப்பு, நரசிம்ம நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 45. ஆட்டோ ஓட்டுநர். இவரது ஆட்டோ மற்றும் நண்பர்களான இளங்கோவன், அசோக், சிராஜ் ஆகியோரது ஆட்டோக்களும் நேற்று முன்தினம் இரவு, நரசிம்மன் நகர் 2வது தெருவில் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று காலை 10:00 மணியளவில் வந்து பார்த்தபோது, நான்கு ஆட்டோக்களின் முன்பக்க கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்து சென்றுள்ளனர். இது குறித்து பேசின்பாலம் போலீசார் விசாரிக்கின்றனர். இருதரப்பு மோதலில் ஒருவர் கைது புளியந்தோப்பு: பேசின்பாலம், காவல் நிலையத்துக்கு உட்பட்ட சிவராஜபுரம் முதல் தெருவில் நேற்று முன்தினம் இரவு 12:00 மணியளவில், கிஷோர் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் வீண் தகராறு செய்து கொண்டிருந்தார். இதை அப்பெண் தன் காதலனான மோசஸ் என்பவரிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த மோசஸ், கிஷோரை தாக்கியுள்ளார். இதனால் இருதரப்பிற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் கிஷோரின் சித்தி ஷோபனா என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேசின்பாலம் போலீசார் வழக்கு பதிந்து, புளியந்தோப்பு சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த மோசஸ், 19 ,என்பவரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். நடைபயிற்சி சென்றவரிடம் போன் பறிப்பு பெரம்பூர்: பெரம்பூர், சிறுவள்ளூர் தெரு பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம், 61. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், கையில் மொபைல் போனுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மூவர், சாம்பசிவம் கையில் வைத்திருத்த, 15,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை பறித்து தப்பினர். செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர். ரூ.1 லட்சம் பறித்தோருக்கு வலை பெரம்பூர்: பெரம்பூர் அருகே அகரம் கோவிந்தராஜுலு தெருவைச் சேர்ந்தவர் சுகுமார், 67. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். நேற்று காலை, பெரியார் நகர் தபால் அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன் கதவு அருகே, பணத்தை மனைவியிடம் கொடுத்த போது, சுகுமாரை பின்தொடர்ந்து வந்த இருவர், பணத்தை பறித்து பைக்கில் தப்பினார். செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர். மூதாட்டியின் நகை திருடியவர் கைது அம்பத்துார்: அம்பத்துார், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் மைதிலி, 79. இவர், திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக, புதுாரில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு, 10 நாட்களுக்கு முன் சென்றார். இந்த நிலையில், அவரது வீட்டில் இருந்த நான்கரை சவரன் நகை, கடந்த 22ம் தேதி திருட்டு போனது. விசாரித்த அம்பத்துார் போலீசார், திருட்டில் ஈடுபட்ட குன்றத்துாரைச் சேர்ந்த விபின், 20 என்பவரை நேற்று கைது செய்தனர்.
28-Oct-2025