மேலும் செய்திகள்
பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் மாயம்
36 minutes ago
க்ரைம் கார்னர்//
24-Oct-2025
தலைமறைவு குற்றவாளி கைது பெரவள்ளூர்: பெரவள்ளூர் காவல் நிலைய எல்லையில், கடந்த மார்ச் மாதம், சந்துரு, 24, என்பவர் கொல்லப்பட்ட வழக்கில், அம்பத்துாரைச் சேர்ந்த 'பெங்கால்' பாலு, 23, என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த அவர், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து, அவரை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பெரவள்ளூர் போலீசார், நேற்று பாலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஐ - போன் திருடியவர் கைது சென்னை: எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ரூபன், 35. இவரது தந்தையின் ஐ - போன், கடந்த 3ம் தேதி நள்ளிரவு திருட்டு போனது. எழும்பூர் போலீசார் விசாரணையில், மதுரையைச் சேர்ந்த ஜெயவிஜயன், 25, என்பவர், மொபைல் போனை திருடியது தெரியவந்தது. போலீசார், நேற்று அவரை கைது செய்து, மொபைல்போனை மீட்டனர். மனைவியை தாக்கிய கணவர் கைது சென்னை: ஷெனாய் நகர், பாரதிபுரம், 2வது தெருவைச் சேர்ந்தவர் ராமு, 32. அவரது மனைவி காயத்ரி, 30. கடந்த 4ம் தேதி இரவு, மது அருந்தி வந்த ராமுவிடம், காயத்ரி தட்டிக்கேட்டுள்ளார். அதனால், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமு, தகாத வார்த்தைகளால் பேசி, காய்கறி வெட்டும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பினார். ரத்தக்காயமடைந்த காயத்ரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அமைந்தகரை போலீசார், ராமுவை நேற்று கைது செய்தனர். பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் மாயம் சேலையூர்: கிழக்கு தாம்பரம், அண்ணாதுரை தெருவை சேர்ந்தவர் விமலா, 40. வீட்டு வேலை செய்து வருகிறார். நவ., 4ம் தேதி, வீட்டு பீரோவில், 3 லட்சம் ரூபாய் வைத்திருந்தார். நேற்று காலை, பீரோவை திறந்து பார்த்த போது, உள்ளே வைத்திருந்த பணம் மாயமானதை கண்டு, விமலா அதிர்ச்சியடைந்தார். பீரோ முழுதும் தேடியும் கிடைக்காததால், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர். 3.4 கிலோ குட்கா பறிமுதல் வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை, அஜிஸ் முகமது கவுஸ் தெருவில், குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக, வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மாவா உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்ற, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஷேக் சனாவுல்லா, 42, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து, 3.4 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெண்ணிடம் செயின் பறிப்பு பெருங்களத்துார்: புதுபெருங்களத்துார், ஆர்.எம்.கே., நகர், நேதாஜி குறுக்கு தெருவை சேர்ந்தவர் சங்கீதா, 32. தன் மகளுடன், நேற்று முன்தினம், அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சங்கீதா அணிந்திருந்த 12 கிராம் தங்க செயினை அறுத்து மாயமாகினார். சங்கீதா சத்தம் போடவே, கோவிலில் இருந்த பக்தர்கள், மர்ம நபர்களை விரட்டினர். அதற்குள் அவர்கள் மறைந்தனர். பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர். பால் கடையில் ரூ.25,000 திருட்டு பம்மல்: பம்மல், பல்லவன் தெருவை சேர்ந்தவர் ராம் பிரகாஷ், 26. இவர், பம்மலை அடுத்த பொழிச்சலுார், பஜனை கோவில் தெருவில், மூன்று ஆண்டு களாக பால் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை திறக்க வந்தபோது, கடை ஷட்டரில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, கல்லா பெட்டியில் வைத்திருந்த, 25,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. ராம் பிரகாஷ் அளித்த புகாரின்படி, சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
36 minutes ago
24-Oct-2025