உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கிரைம் பாயின்ட்...: சென்னை

 கிரைம் பாயின்ட்...: சென்னை

குட்கா விற்ற மூவர் கைது

சென்னை: எழும்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று காலை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்களை விற்ற இருவரை பிடித்து விசாரித்ததில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெனடிக் டோபோ, 50, நெக்பர் அலி, 39, என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அனாச்சர் அலி, 52, என்பவரும் கைது செய்யப்பட்டார்.

போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்தவர் கைது

சென்னை: தேனாம்பேட்டை போலீசார் கடந்த 2024ல் வழிப்பறி வழக்கில், தி.நகரைச் சேர்ந்த கார்த்திக், 27, என்பவரை கைது செய்தனர். வழக்கின் விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்தவர் தலைமறைவானார். தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால், டிச., 2ம் தேதி நீதிமன்றம் 'வாரன்ட்' பிறப்பித்தது. இதையடுத்து, போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

மளிகை வியாபாரி தீக்குளிப்பு

மாதவரம்: விடுதியில் தங்கியிருந்த மளிகை வியாபாரி, தீக்குளித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணலியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ், 43; மளிகை வியாபாரி. இவர், நேற்று மதியம் புழல் ரெட்டேரி அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.அங்கு நேற்று மாலை திடீரென தீக்குளித்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாதவரம் போலீசாரின் விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக, ஆரோக்கியராஜ் தீக்குளித்தது தெரியவந்தது. அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

அடகு கடை பூட்டை உடைத்தவர் கைது

முகப்பேர்: முகப்பேரில், அடகு கடையின் ஷட்டர் பூட்டை கடப்பாரையால் உடைத்து, திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். முகப்பேர் மேற்கு, வேணுகோபால் தெருவில் ஆறு ஆண்டுகளாக அடகு கடை நடத்தி வருபவர் கணேஷ், 41. இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், கடையை பூட்டி சென்றார். நள்ளிரவில், கடையில் 'சிசிடிவி' கேமரா காட்சிகளை பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர், கடை முன் இருந்த விளக்கின் ஒயர்களை துண்டித்து, ஓரமாக அமர்ந்து கடப்பாரையால் பூட்டை உடைக்க முயன்றது தெரிந்தது. அக்கம் பக்கத்தினருடன் கடைக்கு சென்ற கணேஷ், மர்ம நபரை மடக்கி பிடித்து நொளம்பூர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், பீஹார் மாநிலத்தைச் கட்டட தொழிலாளி கோவிந்த் ஷர்மா, 28 என தெரிந்தது. நொளம்பூர் போலீசார், அவரை கைது செய்து, இது போல் வேறு எங்காவது கைவரிசை காட்டி உள்ளாரா என விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை