பட்டாக்கத்தியுடன் பைக்கில் வந்த வாலிபருக்கு ‘கம்பி’
பட்டாக்கத்தியுடன் பைக்கில் வந்த வாலிபருக்கு ‘கம்பி’ வண்ணாரப்பேட்டை: மண்ணடி, இப்ராஹிம் சாலை ரவுண்டானா அருகே, நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்ட முத்தியால்பேட்டை போக்குவரத்து போலீசார், மதுபோதையில் பட்டாக்கத்தியுடன் பைக்கில் வந்த பெரம்பூரைச் சேர்ந்த சையது ஆசிம் ஆகாப், 32, என்பவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். அவருடன் வந்த தப்பிய பால்ராஜை, 30, போலீசார் தேடி வருகின்றனர். கஞ்சா விற்ற மூவருக்கு ‘காப்பு’ பம்மல்: பம்மல், திருநீர்மலை சுடுகாடு அருகே சுற்றித்திரிந்த அனகாபுத்துாரைச் சேர்ந்த ராஜா, 25, ஸ்டீபன் ராஜ், 28, கன்டோன்மென்ட் பல்லாவரத்தைச் சேர்ந்த நிர்மல் ராஜ், 24, ஆகியோரை, சங்கர் நகர் போலீசார் நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர். அவர்கள், விரைவில் பணக்காரராக ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, புறநகர் பகுதிகளில் விற்பனை செய்தது தெரிந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்; ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. உணவு டெலிவரி ஊழியர் தற்கொலை படப்பை: மாடம்பாக்கம், வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் மோகன், 44; தனியார் நிறுவன டெலிவரி ஊழியர். இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, மோகன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிமங்கலம் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர். ஆட்டோ திருடிய போதை ஆசாமி சிக்கினார் வில்லிவாக்கம்: பாடி, கலைவாணர் நகரைச் சேர்ந்த யுவராஜ், 32; ஆட்டோ ஓட்டுநர். கடந்த 11ம் தேதி வில்லிவாக்கம் மாநகராட்சி அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த அவரது ஆட்டோ திருட்டு போனது. விசாரித்த வில்லிவாக்கம் போலீசார் திருட்டில் ஈடுபட்ட ஆதி நாயுடு தெருவைச் சேர்ந்த அன்புசெல்வன், 55, என்பவரை, நேற்று கைது செய்து, ஆட்டோவை மீட்டனர். பீஹார் வாலிபரிடம் வழிப்பறி: சிறார் இருவர் கைது திருவான்மியூர்: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரோகித், 20; திருவான்மியூரில் உள்ள டீக்கடையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, எல்.பி., சாலையில் நடந்து சென்ற அவரிடம், கத்திமுனையில் இருவர் 4,500 ரூபாயை பறித்து சென்றனர். விசாரித்த திருவான்மியூர் போலீசார், கண்ணகி நகரைச் சேர்ந்த 17 வயதுடைய இரு சிறுவர்களை நேற்று கைது செய்து, சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.