தார் சாலை அமைத்தும் தவிர்க்கும் மாநகர பேருந்துகள் அனல்மின் நிலைய குடியிருப்பு மக்கள் தவிப்பு
எண்ணுார் எண்ணுார் அனல் மின் நிலையம் அருகே, அணுகு சாலையில் தார் சாலை அமைத்த பிறகும், அதை அலட்சியப்படுத்தி மேம்பாலம் வழியாகவே மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதால், தபால் நிலையம், வங்கி, ரயில் நிலையம் செல்வோர் மற்றும் அனல்மின் நிலைய குடியிருப்பு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை, எண்ணுார், எர்ணாவூர் மற்றும் அன்னை சிவகாமி நகர் ஆகிய மூன்று பகுதிகளை இணைக்கும் வகையில், கைவிடப்பட்ட எண்ணுார் அனல்நிலையம் அருகே, கத்திவாக்கம் மூன்று வழி மேம்பாலம் உள்ளது. இதில், எர்ணாவூர் - எண்ணுார் செல்லும் மேம்பால பகுதியின் கீழ் புறத்தில், கைவிடப்பட்ட எண்ணுார் அனல்மின் நிலையம், நிர்வாக பிரிவில் பல ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். அதனருகே, அனல்மின் நிலைய குடியிருப்புகள், மக்கள் அதிகம் கூடும் கோவில், வங்கி, பள்ளி உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதனால், மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையில் மக்கள் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்நிலையில், மேம்பாலத்தின் அணுகு சாலைகள் பள்ளம் மேடுமாக இருந்ததால், சில மாதங்களாக மாநகர பேருந்துகள், மேம்பாலத்தில் இயக்கப்பட்டன. இப்பிரச்னையில் அப்பகுதியில், போராட்டம் நடத்தப்பட்டு, தற்போது அணுகு சாலைகள், புதிய தார் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால், தற்போதும் பேருந்துகள் மேம்பாலத்தின் வழியாகவே இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, அனல்மின் நிலைய குடியிருப்பு மக்கள், கத்திவாக்கம் ரயில் நிலையம் செல்வோர், மேம்பாலத்தின் இறக்கத்தில் இறங்கி, 200 - 500 மீட்டர் துாரம் நடக்க வேண்டியுள்ளது. எனவே, மாநகர போக்குவரத்து கழகம் கவனித்து, மக்கள் போக்குவரத்து மிகுந்த, கத்திவாக்கம் மேம்பாலம் கீழ், மாநகர பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.