உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆகாய தாமரை படர்ந்து மூடப்பட்ட திருநீர்மலை ரங்கநாதர் கோவில் குளம் துர்நாற்றம் வீசுவதாக பக்தர்கள் புகார்

ஆகாய தாமரை படர்ந்து மூடப்பட்ட திருநீர்மலை ரங்கநாதர் கோவில் குளம் துர்நாற்றம் வீசுவதாக பக்தர்கள் புகார்

திருநீர்மலை, திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் குளம், ஆகாய தாமரையால் மூடப்பட்டுள்ளதால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதாக, பக்தர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பழமைவாய்ந்த ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோவிலில், நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என, நான்கு கோலங்களில் பெருமாள் அருள்பாலிக்கிறார். பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகின்றனர். கோவில் அடிவாரத்தில் குளம் உள்ளது. இக்குளத்தை முறையாக பராமரிக்காததால், சீரழிந்து விட்டது. உட்பகுதியிலும், குளத்தை சுற்றிலும் குப்பை கழிவுகள் தேங்கி, சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. குளத்தின் மேற்பகுதி, மது அருந்தும் இடமாக மாறிவிட்டது. ஆகாய தாமரை வளர்ந்து, குளத்தையே மூடிவிட்டது. பார்ப்பதற்கு கோவில் குளமா அல்லது ஆகாய தாமரையால் மூடப்பட்ட குட்டையா என எண்ணும் அளவிற்கு, மோசமான நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், குளத்தின் அருகே செல்லவே தயங்குகின்றனர். பல மாதங்களாக இப்பிரச்னை நீடித்தும், குளத்தை சுத்தப்படுத்தி பராமரிக்க, கோவில் நிர்வாகம் முயற்சி கூட செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விஷயத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிட்டு, குளத்தை நேரில் ஆய்வு செய்து, ஆகாய தாமரையை அகற்றி, சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை