பெரியபாளையத்தில் நெரிசலால் பக்தர்கள் அவதி
பெரியபாளையம், பெரியபாளையத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சாலையோரம் கடை அமைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, பெரியபாளையத்தில் உள்ள பவானியம்மன் கோவிலில் விசேஷமாக நடக்கும் ஆடி மாத விழா, கடந்த ஜூலை 17ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும், 50,000க்கும் மேற்பட்டோர், தரிசனம் செய்ய வருகின்றனர். வெளியூர்களில் இருந்து, பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கியது முதல் போக்குவரத்து நெரிசல் துவங்குகிறது. பேருந்து நிலையத்தில் இருந்து, பி.டி.ஓ., அலுவலகம் வரை, சாலையின் இருபுறமும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைப்பது, அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால், கூடுதல் நெரிசல் ஏற்படுகிறது. சாலை ஆக்கிரமிப்பை அகற்றி, போக்குவரத்து சீராக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.