உயிர்பலி வாங்க காத்திருக்கும் பாழடைந்த போலீஸ் குடியிருப்பு
திருவொற்றியூர்,திருவொற்றியூர், பாலகிருஷ்ணா நகரில் 1996ம் ஆண்டு, கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகள் உள்ளன. இதில், ஐந்து தொகுப்புகளில், தலா 16 வீடுகள் மற்றும் ஒரு தொகுப்பில் எட்டு வீடுகள் என, மொத்தம், 88 வீடுகள் உள்ளன.போலீசார் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில், கட்டடம் பலவீனமடைந்ததால் ஐந்து ஆண்டுகளுக்கு முன், அருகேயே புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டன.பின், காவலர்கள் குடும்பத்தினருடன், புதிய குடியிருப்புகளுக்கு இடம் பெயர்ந்தனர். இந்நிலையில், பலவீனமான பழைய கட்டடங்களை இடிக்காமல் அப்படியே விட்டுள்ளனர்.பழைய கட்டடம் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் தருவாயில் அபாயகரமான நிலையில் உள்ளது. அந்த வளாகத்தில் குழந்தைகள் விளையாடுகின்றனர். முதியவர்கள் நடைபயிற்சி செல்கின்றனர். அதுபோன்ற நேரங்களில் கட்டடம் இடிந்து விழுந்தால் உயிர் பலி ஏற்படக்கூடும்.மேலும், கைவிடப்பட்ட கட்டட வளாகத்தில் மழைநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகும் மையமாக மாறி வருகிறது. இதனால், காய்ச்சல் போன்ற நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.தவிர, கட்டடத்தினுள் குப்பை மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், சுகாதாரமற்ற சூழல் நிலவி வருகிறது.குறிப்பாக, புதிய கட்டடம் பின்புறம் உள்ள பழைய காவலர் குடியிருப்பு கட்டடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுலாம் என, குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, புதிய குடியிருப்புகளும் சேதமாக வாய்ப்புள்ளது.எனவே, கைவிடப்பட்ட பாழடைந்த கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.