கோலாகலமாக துவங்கியது தினமலர் - வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர், மாணவியர் ஆர்வம்; பெற்றோர் உற்சாகம்
சென்னை:'தினமலர்' நாளிதழ் நடத்தும், பிளஸ் 2 மாணவர்களுக்கான, 'வழிகாட்டி' நிகழ்ச்சி, சென்னையில் நேற்று துவங்கியது. மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் ஆர்வமுடன் பங்கேற்று, கல்வியாளர்களின் ஆலோசனைகளைப் பெற்றனர்.பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியுள்ள மாணவர்கள், அடுத்து உயர் கல்வியில் சேருவதற்கு ஆலோசனைகள் வழங்கும், 'தினமலர் - வழிகாட்டி' நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று துவங்கியது. மூன்று நாள் நடக்கும் இந்நிகழ்ச்சி, கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. அரங்கில் அமைக்கப்பட்டிருந்த உயர் கல்வி கண்காட்சியை, கோவை ஸ்ரீ சக்தி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் தலைவர் தங்கவேல், 'ரிப்பன்' வெட்டி திறந்து வைத்தார். சென்னை சிவ் நாடார் பல்கலை மாணவர் சேர்க்கை பிரிவு மேலாளர் பாஷா திரிபாதி, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி குழுமத்தின் மக்கள் தொடர்பு மேலாளர் பிரகதீஸ்வரன், அமெட் பல்கலை துணைத் தலைவர் தீபா ராஜேஷ், ஆடிட்டர் ராஜேந்திரகுமார், கோவை அமிர்தா பல்கலை பேராசிரியர் வெங்கட சுப்பிரமணியன், வேல்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்ட் ஸ்டடீஸ் வணிகப் பிரிவு மேலாளர் முகமது கான் ஆகியோர் பங்கேற்றனர்.கண்காட்சியில், பல்வேறு உயர் கல்வி நிறுவனங்கள் சார்பில், 80க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தந்த கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும், உயர் கல்வி குறித்த முழு விபரங்களை, மாணவர்கள் அறிந்து கொண்டனர். ஒவ்வொரு அரங்கிலும், துண்டுப் பிரசுங்கள், கையேடுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு அரங்கிலும், 'டிஜிட்டல்' திரைகள் அமைத்து, முழு தகவலும் திரையில் காட்டப்பட்டன.அரங்கில் நடந்த கருத்தரங்கில், பல்வேறு துறை கல்வியாளர்கள் பங்கேற்று, உயர் கல்வி குறித்து ஆலோசனைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் ஆர்வமாக குறிப்பெடுத்துக் கொண்டனர். அடுத்து என்ன படிக்கலாம் என்பது தொடர்பாக, மாணவர்கள் தங்களுக்கு இருந்த சந்தேகங்களை, கல்வியாளர்களிடம் தெரிவித்து, விளக்கம் கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்ச்சி, காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடந்தது.