தினமலர் செய்தி எதிரொலி குடிமகன்களுக்கு எச்சரிக்கை
சென்னை:நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், சாந்தி திரையரங்கம் அருகே உள்ள சுரங்க நடைபாதையில் அமர்ந்து மது அருந்துவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறையினர் எச்சரிக்கை பதாகை அமைத்துள்ளனர்.அண்ணாசாலை சாந்தி திரையரங்கம் அருகே, டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. அங்கு மது பாட்டில்களை வாங்கும் குடிமகன்கள், அருகே உள்ள சுரங்க நடைபாதையில் அமர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.இதனால் இரு வழிப்பாதையான சுரங்கப்பாதையில், ஒரு வழியை மட்டுமே பாதசாரிகள் சாலையை கடப்பதற்கென பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்,'ஒரு வழிப்பாதை மூடப்பட்டே உள்ளது' என, நம் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது.அதைத் தொடர்ந்து தற்போது, சுரங்க நடைபாதையில் 'இங்கு மது அருந்தக் கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, காவல் துறையினர் எச்சரிக்கை பதாகை அமைத்து உள்ளனர்.