உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாற்றுத்திறனாளிகள் நடைபாதையை நொச்சிகுப்பத்திற்கு மாற்ற எதிர்ப்பு

மாற்றுத்திறனாளிகள் நடைபாதையை நொச்சிகுப்பத்திற்கு மாற்ற எதிர்ப்பு

சென்னை, விவேகானந்தர் இல்லத்திற்கு முன் உள்ள மாற்றுத்திறனாளிகள் நடைபாதையை, நொச்சிக்குப்பம் பகுதிக்கு மாற்றி அமைக்கும் முடிவுக்கு, அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ், 2022ல், மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில், அவர்களுக்கான சிறப்பு நடைபாதை அமைக்கப்பட்டது. அதன்படி மெரினா கடற்கரையில், விவேகானந்தர் இல்லத்திற்கு முன், மணல் பரப்பில் 380 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்தப் பாதை அமைக்கப்பட்டது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் 1 கோடி ரூபாய் செலவில் பாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த நடைபாதை சேதமடைந்துள்ளதால், அதை நொச்சிக்குப்பம் பகுதிக்கு மாற்றம் செய்வதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த நடைபாதையை நொச்சிக்குப்பம் பகுதிக்கு மாற்றி அமைத்தால், தொழில் பாதிக்கக் கூடும் என, அப்பகுதி மீனவர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இதுகுறித்து, தென்னிந்திய மீனவர் நலச்சங்க தலைவர் பாரதி கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் நடைபாதை அமைந்துள்ள விவேகானந்தர் இல்லம் பகுதியில், 50 படகுகள் தான் உள்ளன. ஆனால், நொச்சிக்குப்பம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. இங்கு மீன் தொழில் அதிகளவில் நடக்கும் பகுதியாக உள்ளது. மீனவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் இந்த திட்டத்தை இங்கு கொண்டு வர திட்டமிடப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. தற்போது நடைபாதை இருக்கும் பகுதியிலேயே, அதை சீரமைக்கலாம். அதை மாற்றியமைக்க வேண்டிய முடிவு, மீனவர்களுக்கு சந்தேகத்தை எழுப்பி உள்ளது. நொச்சிக்குப்பம் பகுதிக்கு மாற்றியமைத்தால், நிச்சயம் மீன் பிடி தொழிலுக்கு இடையூறு ஏற்படும். எனவே, இந்த முடிவு குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் முறையாக பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை