திருநீர்மலை ஏரியை சீரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கி அறிவிப்பு நிதி போதாது என அதிருப்தி
திருநீர்மலை, குரோம்பேட்டையை அடுத்த திருநீர்மலையில் பெரிய ஏரி உள்ளது. 194.01 ஏக்கர் பரப்பளவு கொண்ட இவ்வேரி, ஆக்கிரமிப்பால், 146.94 ஏக்கராக குறைந்து விட்டது.மேலும், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பல ஆண்டுகளாக இவ்வேரியில் கலக்கிறது.திருநீர்மலை ஏரி, கண்ணெதிரே நாசமடைவதை தடுத்து நிறுத்தி, துார்வாரி, ஆழப்படுத்த வேண்டும் என, அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன், எக்ஸ்னோரா மற்றும் ஏரி பாதுகாப்பு குழுவினர் இணைந்து, ஏரியை துாய்மைப்படுத்தினர்.இந்நிலையில், 5.15 கோடி ரூபாய் செலவில், இவ்வேரியை ஆழப்படுத்தி, புனரமைப்பது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு வரவேற்றுள்ள ஏரி பாதுகாப்பு குழுவினர், இந்த நிதியை கொண்டு, ஏரியை முழுமையாக சீரமைக்க முடியாது என, தெரிவித்துள்ளனர்.ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், ஆகாய தாமரை அகற்றுதல், கரையை பலப்படுத்துதல், கதவுடன் கூடிய மதகு மற்றும் நாட்டு கால்வாயில் 50 மீட்டர் துாரத்திற்கு தடுப்பு சுவர் கட்டுதல் ஆகிய பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட உள்ளன.அதனால், ஏரி புனரமைப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்க, நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
திட்டம் தேவை
ஏரி பாதுகாப்பு குழுவினர் கூறியதாவது:ஒதுக்கப்பட்டுள்ள 5 கோடியில் அனைத்து பணிகளையும் செய்ய முடியாது. திருநீர்மலை ஏரி கலங்கலில் இருந்து அடையாறு ஆற்றுக்கு செல்லும் நாட்டுக் கால்வாயை முறையாக துார்வாரி, ஆழப்படுத்தி, மூடுகால்வாயாக மாற்ற வேண்டும்.இதை முறையாக செய்தால், மழை காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாது. இதற்கு எந்த நிதியும் ஒதுக்கியதாக தெரியவில்லை.அதனால், நாட்டு கால்வாய் மற்றும் திருநீர்மலை ஏரிக்கு ஒருங்கிணைந்த திட்டம் தீட்டி, தேவையான நிதி ஒதுக்கி, பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.