வெளிநாட்டு வேலை ஆசையா? மோசடி குறித்து எச்சரிக்கை!
சென்னை,வெளிநாடுகளில் கவுரவமான வேலை, கை நிறைய சம்பளம் என, சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து, லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்று, சைபர் குற்றவாளிகளாக மாற்றும் கும்பல் அதிகரித்து வருகிறது.இது தொடர்பாக, சமீபத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி, ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது, அதே மாதிரியான கும்பல், வெளிநாடு வேலைக்கு ஆசை காட்டி, 20 லட்சம் ரூபாய் வரை சுருட்டி இருப்பது தெரியவந்துள்ளது.போலீசார் கூறியதாவது:சேலத்தைச் சேர்ந்த கார்த்திக் பிரசன்னா என்பவர், வேதா வென்ட்ஜர் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாக, சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். அவரது மனைவி என, ஷீலா, சென்னை வளசரவாக்கத்தில், சினிடோர் ஸ்டூடியோ என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், கார்த்திக் பிரசன்னாவின் தங்கை, ஜெர்மனில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருவதாகவும் விளம்பரம் செய்துள்ளார்.இந்த கடைக்கும், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை வாங்கித் தருவதாக, 30க்கும் மேற்பட்ட நபர்களிடம், 20 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.அவர்கள், பாதிக்கப்பட்ட நபர்களை, சென்னையில் உள்ள ஜெர்மன் துாதரகத்திற்கு நேர்காணல் நடக்க இருப்பதாகவும், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவனையில் பரிசோதனை செய்ய வேண்டும் என, வரவழைத்தும், 'எஸ்கேப்' ஆகியுள்ளார்.கார்த்திக் பிரசன்னா, ஷீலா ஆகியோரால் பாதிக்கப்பட்ட நபர்கள், சென்னை போலீஸ் கமிஷனரகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார், விசாரணைக்காக தி.நகர் துணை கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.