இருவரை குத்தி கொன்ற நண்பனுக்கு இரட்டை ஆயுள்
சென்னை, திருவான்மியூர், குப்பம் பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பவரின் மகன் சதீஷ்குமார், 27. பட்டதாரியான இவரது நண்பர்கள், அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார், தினேஷ்.இந்த நிலையில், சதீஷ்குமாரின் தாய் இறப்பு நிகழ்வுக்கு, நண்பர்கள் அனைவரும் சென்றுள்ளனர்.அப்போது அங்கிருந்த வசந்தகுமார் என்ற சிறுவனின் மொபைல் போனை எடுத்து, தினேஷ் விளையாடி உள்ளார். அப்போது, அருண்குமார், தினேஷ், சதீஷ்குமார் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது.இந்நிலையில், 2022 ஏப்., 30ம் தேதி இரவில், அருண்குமார், சதீஷ்குமார் ஆகியோரின் வீட்டுக்கு சென்ற தினேஷ், தான் வைத்திருந்த கத்தியால் அவர்களை குத்தினார்.இதில் படுகாயமடைந்த இருவரும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து, திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினேஷை கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 17வது கூடுதல் அமர்வு நீதிபதி ஆர்.தோத்திரமேரி முன் நடந்தது. போலீசார் தரப்பில், மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜெ.சரவணன் ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி, ''தினேஷ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இருவர் கொலைக்கு காரணமான தினேஷுக்கு, இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்,'' என தீர்ப்பளித்தார்.