உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சேதமடைந்த மின் கேபிளை மாற்றுவதில் பிரச்னை 2 மாதமாக கிடப்பில் போடப்பட்ட வடிகால்வாய் பணி

சேதமடைந்த மின் கேபிளை மாற்றுவதில் பிரச்னை 2 மாதமாக கிடப்பில் போடப்பட்ட வடிகால்வாய் பணி

காரப்பாக்கம், சேதமடைந்த மின் கேபிளை சரி செய்வதில், ஒப்பந்த நிறுவனத்திற்கும், மின் வாரியத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, வடிகால்வாய் அமைக்கும் பணி இரண்டு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. சோழிங்கநல்லுார் மண்டலம், 198வது வார்டு, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம் பகுதியில், நுாற்றுக்கு மேற்பட்ட தெருக்கள் உள்ளன. வெள்ள பாதிப்பு பகுதியானதால், 36 தெருக்களில், 45 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கியது. பகிங்ஹாம் கால்வாயில் மழைநீர் சேரும் வகையில், வடிகால்வாய் கட்டமைக்கப்படுகிறது. இதில், 7 தெருக்களில் பணி முடிந்தது. மீதமுள்ள தெருக்களில் அரைகுறையாக பணி நடக்கிறது. பல தெருக்களில் பள்ளம் தோண்டி பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, நியூ குமரன் நகர், நடுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில், பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், சாலையை பயன்படுத்த முடியாமல், அப்பகுதி மக்கள் பரிதவிக்கின்றனர். பள்ளம் தோண்டியபோது, மின் கேபிள்கள் சேதமடைந்தன. வடிகால்வாய் பணி செய்யும் ஒப்பந்த நிறுவனம், மின் வாரியத்திற்கு கேபிள் வாங்கி கொடுத்து, சேதத்தை சரி செய்ய வேண்டும். ஆனால், மின் வாரியத்திற்கும், ஒப்பந்த நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால், இரண்டு மாதங்களாக பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பள்ளம் தோண்டும் போது, ஆங்காங்கே கேபிள்கள் சேதமடைந்தன. மொத்த கேபிளையும் மாற்றினால் தான், சீரான மின் வினியோகம் வழங்க முடியும். லேசான பழுதுக்கு கேபிள் வாங்கி தர மாட்டோம் என, ஒப்பந்தம் நிறுவனம் அடம் பிடிக்கிறது' என்றனர். ஒப்பந்தம் நிறுவன ஊழியர்களிடம் கேட்டபோது, 'நாங்கள் பள்ளம் தோண்டிய துாரத்திற்கு கேபிள் வாங்கித்தர தயாராக உள்ளோம். ஆனால், பள்ளம் எடுக்காத தெருக்களுக்கும் சேர்த்து கேபிள் கேட்கின்றனர். இதனால், பணி பாதியில் நிறுத்தப்பட்டது' என்றனர். மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பருவ மழைக்கு முன் வடிகால்வாய் பணியை முடிக்கும் வகையில், ஒப்பந்தம் வழங்கியுள்ளோம். மின் வாரியத்திற்கும், வடிகால்வாய் பணி மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால், பருவ மழைக்கு முன் பணி முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், வெள்ள பாதிப்பு அதிகரிக்கும் என, ஒப்பந்த நிறுவனத்திடம் வலியுறுத்தி உள்ளோம். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. இது குறித்து, கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை