துபாய் விமானத்தில் கோளாறு சென்னையில் தரையிறக்கம்
சென்னை: மதுரையில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், இயந்திர கோளாறு காரணமாக, சென்னையில் நேற்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. மதுரையில் இருந்து, பகல் 12:10 மணிக்கு துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட வேண்டும். ஆனால், விமானம் தாமதமாக 12:37 மணிக்கு, மதுரையிலிருந்து 167 பயணியர், ஆறு விமான ஊழியர்கள் என, 173 பேருடன புறப்பட்டது. விமானம், 1:15 மணிக்கு, 27,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதை கண்டுபிடித்த விமானி அதிர்ச்சி அடைந்தார். சென்னை வான்வெளியில் விமானம் பறந்து கொண்டிருந்ததால், சென்னை விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், உடனடியாக விமானத்தை தரையிறக்க அனுமதித்தனர். விமானம், மதியம் 2:35 மணிக்கு அவசரமாக தரையிறங்கியது. பின், விமானத்தில் இருந்த பயணியர், பத்திரமாக கீழே இறக்கப்பட்டு, ஓய்வறையில் அமர வைக்கப்பட்டனர். விமானத்தின் கோளாறு சரி செய்யப்பட்ட பின், மீண்டும் துபாய் புறப்படும் என, விமான நிறுவனம் தெரிவித்தது.