துபாய் விமானத்தில் இயந்திர கோளாறு ரன்வேயில் நிறுத்தம்: 296 பேர் தப்பினர்
சென்னை: துபாய்க்கு புறப்பட இருந்த விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்படவே, 'ரன்வே' எனும் ஓடுபாதையில் உடனே நிறுத்தப்பட்டது. இதனால், 296 பேர் உயிர் தப்பினர். சென்னையில் இருந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய்க்கு செல்லும் 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம், நேற்று அதிகாலை 3:50 மணிக்கு, சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்தது. அதில், 284 பயணியர், 12 விமான ஊழியர்கள் என, 296 பேர் இருந்தனர். விமானம் புறப்பட ஏதுவாக, ஓடுபாதையில் வேகமாக சென்று கொண்டிருந்த போது, திடீரென இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். சுதாரித்த அவர், உடனடியாக சாமர்த்தியமாக ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, இழுவை வாகனம் மூலம், பழுது நீக்கும் இடத்திற்கு விமானம் இழுத்துச் செல்லப்பட்டது. பொறியாளர்கள், இயந்திர கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக பழுது நீக்க முடியவில்லை. இதனால், பயணம் ரத்து செய்யப்பட்டு, பயணியர் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானியின் சாமர்த்தியத்தால் 296 பேர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.