உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரவு நேர மருத்துவர் இல்லாததால் பிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தை தினமலர் பலமுறை சுட்டிக்காட்டியும் மீண்டும் அசம்பாவிதம்

இரவு நேர மருத்துவர் இல்லாததால் பிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தை தினமலர் பலமுறை சுட்டிக்காட்டியும் மீண்டும் அசம்பாவிதம்

துரைப்பாக்கம், கண்ணகி நகரைச் சேர்ந்தவர் அகஸ்டின், 28. இவரது மனைவி தீபிகா, 27. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், நேற்று முன்தினம் இரவு, கண்ணகி நகர் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைக்கு, குடும்பத்தினர் அழைத்து சென்றனர்.அங்கு, மருத்துவர் இல்லாததால், செவிலியர்கள் முதலுதவி அளித்துள்ளனர். தீபிகாவுக்கு ரத்த போக்கு அதிகமாக இருந்ததால், உடனே, ஆம்புலன்சில் திருவல்லிக்கேணி குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு, அறுவை சிகிச்சை அளித்தபோது, ஆண் குழந்தை இறந்து பிறந்தது. கண்ணகி நகர் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்திருந்தால், குழந்தை உயிர் பிழைத்திருக்கும் எனக்கூறி, உறவினர்கள் நேற்று, கண்ணகி நகர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் அவர்களிடம் பேச்சு நடத்தினர். 24 மணி நேரமும் மருத்துவர் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர்கள் கூறியபின், அனைவரும் கலைந்து சென்றனர்.பெண்ணின் கணவர் அகஸ்டின் கூறுகையில், ''மனைவி கருவுற்ற நாள் முதலே, கண்ணகி நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம்.மருத்துவர் இருந்திருந்தால், குழந்தை இறந்திருக்காது. இதுபோன்ற நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது,'' என்றார்.

'

இந்த மருத்துவமனை, 30 படுக்கை வசதி உடையது.பரிசோதனை, சிகிச்சை வசதிக்கான கருவிகள் இருந்தும், இரவு நேரத்தில் மருத்துவர்கள் இருப்பதில்லை. இதனால், அவசர சிகிச்சைக்கு செல்வோர், உரிய சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து, நம் நாளிதழில் பலமுறை செய்தி வெளிவந்தது. இதை கண்டுகொள்ளாமல் விட்டதால், இப்போது, பச்சிளம் குழந்தை உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகமே, காரணமாக இருந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை