குடிநீர் வாரிய அலட்சிய பணியால் நாசமான ஈஸ்வரன் கோவில் தெரு
ஆவடி, குடிநீர் வாரியத்தின் அலட்சிய பணியால், ஈஸ்வரன் கோவில் தெரு குண்டும் குழியுமாக மாறி படுமோசமாக உள்ளது. ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில், 10வது வார்டு, பழைய ஈஸ்வரன் கோவில் தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, தார்ச்சாலை போடப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதன்பின், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சாலை குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற வகையில் மாறியது. இந்நிலையில், கடந்த சில மாதமாக மாநகராட்சி சார்பில் நடந்து வரும் குடிநீர் பணியால், சாலை மேலும் சேதமடைந்துள்ளது. ஆனால் முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால், சமீபத்தில் தேங்கிய மழையால், 'சாலை எது, பள்ளம் எது' என தெரியாமல், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர். இது குறித்து, பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விபத்து, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.