உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுற்றுச்சூழல் பூங்கா பணி கிண்டியில் துவக்கி வைப்பு

சுற்றுச்சூழல் பூங்கா பணி கிண்டியில் துவக்கி வைப்பு

சென்னை: தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், கிண்டியில், 118 ஏக்கரில் அமைய உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில், முதல் கட்டமாக நாற்றங்கால் பண்ணையை திறந்து வைத்து, நீர்நிலைகளின் கரைகளை சீரமைத்தல், அரிய வகை மரங்கள் மற்றும் அழகிய மலர்ச் செடிகள் நடுதல் ஆகிய பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். தமிழக அரசுக்கு சொந்தமாக, கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், கடந்தாண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறைக்கு, 118 ஏக்கர் நிலம் அரசு தரப்பில் ஒதுக்கப்பட்டது. இப்பகுதியில் மாநகராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பு மற்றும் சென்னையை மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில், நான்கு பெரிய குளங்கள் அமைக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் வகையில், முதல் கட்டமாக நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்தும் வகையில், மரம் நடுதல், அழகிய செடிகளை நடவு செய்தல், நாற்றங்கால் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். முன்னதாக, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் ஆகியோர் பணிகளை துவக்கி வைக்கும் வகையில், மரக்கன்று நடவு செய்தனர். தொடர்ந்து, சுற்றுச்சூழல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நான்கு பெரிய குளங்களை சீரமைக்கும் பணியை, முதல்வர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மா நகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை