மேலும் செய்திகள்
சாலை ஆக்கிரமிப்புகள் மீண்டும் அகற்றம்
10-Dec-2024
சென்னை:சென்னையின் பிரதான நுழைவாயில்களில் ஒன்றாக, திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை, 15 கி.மீ., நீள இ.சி.ஆர்., சாலை உள்ளது.இதில், 17 சிக்னல்கள் உள்ளன. சாலையை கடக்க 'பீக் ஹவர்' நேரத்தில் 60 நிமிடங்கள் ஆகிறது.தவிர, ஐ.டி., நிறுவனங்கள் அதிகமுள்ள இந்த சாலையில், புதிய நிறுவனங்களின் வருகையால், வாகன போக்குவரத்து தினமும் அதிகரிக்கிறது.எனவே, திருவான்மியூர் முதல் அக்கரை வரை, ஆறுவழியாக மாற்ற 940 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, நிலம் எடுப்பு பணி நடந்து வருகிறது.அதன்படி திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லுார் ஆகிய பகுதிகளில் நிலம் எடுப்பு பணி 15 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈஞ்சம்பாக்கம் பகுதியில் வீடுகள், கடைகள் என, 35 கட்டடங்களை நெடுஞ்சாலைத் துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அகற்றினர். மவுலிவாக்கம்
குன்றத்துார்- - போரூர் நெடுஞ்சாலையில், மவுலிவாக்கம் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் உள்ள கடைகள், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதனால், தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக பதிவான புகார்களை அடுத்து, வருவாய்த் துறையினர் கணக்கெடுப்பு நடத்தினர். இதில், 31 கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வருவாய் துறை சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் சரவண கண்ணன் தலைமையில் வருவாய்த் துறையினர், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மாங்காடு போலீசார், ஆக்கிரமிப்பு கடைகளை 'பொக்லைன்' இயந்திரத்தால் இடித்து அகற்றும் பணியை நேற்று துவக்கினர்.இந்த நிலையில், கடைகளை இடிக்க சிலர் நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஆணை பெற்றனர். இதனால், நான்கு கடைகளின் ஆக்கிரமிப்புகள் மட்டும், நேற்று அகற்றப்பட்டன. வழக்கு விசாரணை முடிந்த பின், எஞ்சியுள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்படும் என, வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
10-Dec-2024