கல்வித்துறை பால் பேட்மின்டன் திருவொற்றியூர் அரசு பள்ளி வெற்றி
சென்னை, பள்ளிக் கல்வித்துறையின் பால் பேட்மின்டன் போட்டியில், திருவொற்றியூர் அரசு பள்ளி வெற்றி பெற்றது.அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், வடசென்னை வருவாய் மாவட்ட அளவிலான பால் பேட்மின்டன் போட்டிகள், அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தன.அதில், 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மூன்று பிரிவுகளிலும், தலா 13 பள்ளி அணிகள் எதிர்கொண்டன.இதில், 17 வயதுக்குட்பட்ட போட்டியில், முதல் அரையிறுதியில், திரு.வி.க., நகர் பள்ளி மற்றும் பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி அணிகள் எதிர்கொண்டன.விறுவிறுப்பான போட்டியின் முடிவில், 35 - 27, 35 - 25 என்ற கணக்கில், திரு.வி.க., நகர் பள்ளி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.மற்றொரு அரையிறுதியில், திருவொற்றியூர் அரசு பள்ளி மற்றும் புரசைவாக்கம் எம்.சி.டி.எம்., பள்ளிகள் மோதின. அதில், 35 - 22, 29 - 22 என்ற கணக்கில் திருவொற்றியூர் அரசு பள்ளி வெற்றி பெற்றது.அதேபோல், வடசென்னை மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி, முகப்பேர் வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.அதில், 13 அணிகளில் இருந்து, 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.