உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதியின்றி அவதி

எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதியின்றி அவதி

சென்னை, : எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் 35க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், 240க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. தினமும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். ஆனால், போதிய அளவில் பயணியருக்கான அடிப்படை வசதிகள் இல்லை. ரயில்கள் வருகை, புறப்பாடு குறித்து பயணியர் தகவல் அறிந்து கொள்ளும் வகையில், நுழைவு பகுதிகளில் தகவல் பலகை இல்லாததால், அவதிப்படுகின்றனர்.இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: எழும்பூர் ரயில் நிலையத்தில், பயணியர் வருகை அதிகரித்து வருகிறது. ஆனால், போதுமான குடிநீர், கழிப்பிட வசதி, பேட்டரி கார் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. ரயில்களின் புறப்பாடு, வருகை குறித்த தகவல் பெறுவதில் கூட சிரமமாக இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு பகுதியில், டிக்கெட் கவுன்டர்கள் இருக்கும் இடத்திலும் கூட அறிவிப்பு பலகை இல்லை. தகவல் பெற வேண்டுமென்றால், 3, 4 வது நடைமேடைக்கு செல்ல வேண்டியுள்ளது. அவசர, அவசரமாக ரயிலை பிடிக்க வருவோருக்கு பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. விரைவு ரயில்களின் வருகை, புறப்பாடு குறித்த தகவல் பலகை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'எழும்பூர் ரயில் நிலையம் மேம்பாட்டு திட்டத்தில், பயணியருக்கான அனைத்து வசதிகளும் இடம் பெறும். தற்போது, 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளோடு அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்' என்றனர்.

வந்தே பாரத் இயக்க மனு

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துாரில் முருகன் கோவிலுக்கு சென்னை எழும்பூரில் இருந்து தினமும் திருச்செந்துார் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் எப்போதும், பயணியர் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே, பயணியர் நெரிசல் மிக்க இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டுமென தெற்கு ரயில்வேக்கு இ மெயில் வாயிலாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், 'தாம்பரம், விழுப்புரம், மயிலாடுதுறை, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக திருச்செந்துாருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கினால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என, கூறப்பட்டுள்ளது.இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'பயணியர் கோரிக்கை மனு, வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், இந்த தடத்தில் உள்ள பயணியர் தேவை குறித்து தெற்கு ரயில்வே ஆய்வு மேற்கொள்ளும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ