உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விஜய் கட்சி பேனர் விழுந்த முதியவர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அட்மிட் சுய நினைவு திரும்பாததால் தவிக்கும் குடும்பம்

விஜய் கட்சி பேனர் விழுந்த முதியவர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அட்மிட் சுய நினைவு திரும்பாததால் தவிக்கும் குடும்பம்

வில்லிவாக்கம், த.வெ.க., பேனர் விழுந்து காயமடைந்த முதியவர், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாழ்வதாரமே கேள்விக்குறியாகிவிட்டதாக குடும்பத்தினர் கதறுகின்றனர்.சூளை, கோவிந்தன் தெருவைச் சேர்ந்தவர் மோகன், 72; நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவன காவலாளி. இவர், கடந்த 22ம் தேதி இரவு, வில்லிவாக்கத்தில் உள்ள நண்பரை சந்திக்க சென்று, வீடு திரும்பி கொண்டிருந்தார்.தெற்கு மாடவிதி வழியாக செல்லும்போது, த.வெ.க., கட்சி அலுவலகம் திறப்புக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து மோகன் மீது விழுந்தது.இதில், அவரது தலை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவ்வழியே சென்றோர், மோகனை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூளையில் அடைப்பு ஏற்பட்டு, அவருக்கு ரத்த கசிவு இருப்பதாக கூறியுள்ளனர். தற்போது சிகிச்சையில் உள்ள மோகன், சுயநினைவின்றி உள்ளார். மோகனின் மகன் சத்தியநாராயண், 34 கூறியதாவது:விபரம் தெரிந்த நாட்களில் இருந்தே, அப்பாவின் கஷ்டத்தில் தான் வாழ்கிறோம். தாய் துளசி, 64, நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. நான் உட்பட மூன்று பிள்ளைகள். மூவரும் திருமணமாகி தனித்தனியே வசிக்கிறோம். நான், உணவு டெலிவலி நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.காவலாளியான தந்தைக்கு மாதம் 10,000 ரூபாய்தான் ஊதியம். இந்த வருமானத்தில், இருவரும் வாழ்ந்து வந்தனர். கட்சி பேனர் விழுந்ததால், அப்பாவின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது; சுய நினைவின்றி இருக்கிறார். குணமடைய நீண்ட நாட்களாகும் என, டாக்டர்கள் கூறுகின்றனர்.வாழ்வாதாரத்திற்கே சிரமப்பட்டு வரும் நிலையில், கட்சி பேனர் விழுந்ததில், எங்கள் குடும்பம் நடுத்தெருவிற்கு வந்துவிட்டது. அரசு, எங்கள் குடும்பத்திற்கு உதவ முன்வர வேண்டும்.அதேசமயம், இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, பேனர் விவகாரத்தில் அரசு கடுமையாக உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூவர் கைது; மூவருக்கு வலை

காவலாளி மோகன் மீது விழுந்த பேனர் விவகாரத்தில், வில்லிவாக்கம் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அக்கட்சி நிர்வாகிகளான சதீஷ், 22, ஜகன், 21, சந்தோஷ், 22, ஆகிய மூவரை கைது செய்தனர். மூவரும், நீதிமன்ற ஜாமினில் வெளியில் வந்தனர். வழக்கு தொடர்பாக, கட்சியின் மாவட்ட செயலர் பூக்கடை குமார், பகுதி தலைவர் விசு, பேனர் கட்டிய அம்பேத்குமார் ஆகிய மூவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை