வீடு வாங்கிய தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து: முதியவருக்கு 3 ஆண்டு
சென்னை: கோடம்பாக்கம் அருகே, வீடு வாங்கியதில் ஏற்பட்ட தகராறில், ராணுவத்தில் பணிபுரிந்தவரின் மனைவியை கத்தியால் குத்திய முதியவருக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அமல்ராஜ், 65; ராணுவ தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி. கடந்த 2015ல், குன்றத்துாரை சேர்ந்த மணிகண்டன், 59, என்பவரிடம் இருந்து, குத்தகைக்கு இருந்த வீட்டை, அமல்ராஜ் சொந்தமாக வாங்கியுள்ளார். பின், தன்னை ஏமாற்றி குறைந்த விலைக்கு வீட்டை வாங்கியதாக கூறி, சென்னை மத்திய குற்றப் பிரிவில் அமல்ராஜ் மீது மணிகண்டன் புகார் அளித்தார். விசாரணையில், மணிகண்டன் புகாரில் உண்மையில்லை என தெரிய வந்ததை அடுத்து, அமல்ராஜ் மீதான புகாரை, போலீசார் முடித்து வைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, அமல்ராஜ் மீது மணிகண்டன் கோபத்தில் இருந்துள்ளார். வீடு பராமரிப்பு தொடர்பாக, மணிகண்டனின் உறவினர் ராஜேஸ்வரி, 40, அமல்ராஜ் மனைவி ஆகியோர் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2022, பிப்., 14ம் தேதி, வீட்டில் இருந்த கலைச்செல்வியை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி மணிகண்டன் தப்பினார். கோடம்பாக்கம் போலீசார், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, மணிகண்டன், ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின், ஜாமினில் வெளியே வந்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை 18வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. போலீசார் தரப்பில் வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீவத்சன், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, மணிகண்டனுக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 10,500 ரூபாய் அபராதமும் விதித்தார். ராஜேஸ்வரி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.