உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிக்னல் கோளாறால் மின்சார ரயில்கள் தாமதம் விம்கோ நகரில் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம்

சிக்னல் கோளாறால் மின்சார ரயில்கள் தாமதம் விம்கோ நகரில் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர்:சிக்னல் கோளாறு காரணமாக, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில், மின்சார ரயில்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டதால், விம்கோ நகர் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணியர், மறுமார்க்கத்தில் வந்த மின்சார ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே, நேற்று மதியம் 3:20 மணிக்கு சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் மின்சார ரயில்கள், திருவொற்றியூர், வ.உ.சி., கொருக்குப்பேட்டை ரயில் நிலையங்களில், ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.அதனால், விம்கோ நகர் ரயில் நிலையத்தில் காத்திருந்த, 200க்கும் மேற்பட்ட பயணியர், மின்சார ரயில்கள் ஏதும் வராததால் கடும் அவதிக்குள்ளாகினர். அப்போது, மறு மார்க்கமான கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் நோக்கி சென்ற மின்சார ரயில், விம்கோ நகர் ரயில் நிலையத்தில் நின்றது.கும்மிடிப்பூண்டி மார்க்கத்திற்கு ரயில்கள் இயக்கப்படவில்லை. மறு மார்க்கத்தில் மட்டும் ரயில்கள் எப்படி இயங்குகிறது எனக்கூறி, ஆத்திரமடைந்த பயணியர், அந்த ரயிலை மறித்து, ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.தகவலறிந்த ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் செய்தனர். இதற்கிடையில், திருவொற்றியூர் ரயில் நிலையத்தின் மாஸ்டர், 'ஹான்ட்' சிக்னல் மூலம், கும்மிடிப்பூண்டி வழியாக சூலுார்பேட்டை வரை செல்லும் மின்சார ரயிலை மெதுவாக இயக்க அனுமதித்தார்.அதன்படி, சூலுார்பேட்டை வரை செல்லும் ரயில், மெதுவாக இயங்கியபடி விம்கோ நகர் ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது, தொடர்ச்சியாக சிக்னல் பிரச்னையால் ரயில்கள் வருவதில் தாமதம் ஏற்படுவதாக கூறி, அந்த ரயிலையும் மறித்து, பயணியர் வாக்குவாதம் செய்தனர்.பின், ரயில்வே போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். மாலை 4:25 மணிக்கு, இரு மார்க்கத்திலும் ரயில் போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை