மின் வாரிய பணி: குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்த குடிநீர்
ஆவடி, : ஆவடியில், மின்வாரிய பணியின்போது ராட்சத குடிநீர் குழாய் உடைந்து, நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்த தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜெ.பி.எஸ்டேட் அருகே நேற்று முன்தினம், மின்வாரியம் சார்பில் புதை மின் வடம் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியின்போது, ஆவடி மாநகராட்சியின் மெட்ரோ குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை ஆவடி தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு செல்லும் சாலையில், குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு, பல்லாயிரம் லிட்டர் தண்ணீர், நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு கி.மீ., துாரத்துக்கு பாய்ந்தோடி தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். தகவலறிந்த ஆவடி மாநகராட்சி ஊழியர்கள், குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.