வழக்கால் அம்பலமான ஆக்கிரமிப்பு ரூ.150 கோடி அரசு நிலம் மீட்பு
ஆவடிஆவடி அடுத்த திருமுல்லைவாயில், மணிகண்டபுரம், சி.டி.எச்., சாலையில் கணக்கன் குட்டை எனும் அரசு நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது.இதில், 1.68 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, தங்கம் ஹார்டுவேர்ஸ் மற்றும் ஜெய்சக்தி டிம்பர்ஸ் என்ற இரு நிறுவனங்கள், கிடங்கு, லேத் பட்டறை மற்றும் வாகன நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வந்துள்ளன. மீதமுள்ள இடத்தில், 20 வீடுகள் உடைய தனியார் குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தன.இந்நிலையில், கடை வைத்துள்ளவரில் ஒருவர், கடையை காட்டி வங்கியில் கடன் வாங்கியுள்ளார். கடனை சரியாக கட்டாததால், வங்கி நிர்வாகம், 2012ல், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.பல்வேறு தவணைக்கு பின், கடைக்கு 'ஜப்தி' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எதிர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வருவாய் துறைக்கு உத்தரவிட்டது. வருவாய் துறை நடத்திய விசாரணையில், மேற்கண்ட இடம் அரசு நீர்நிலை புறம்போக்கு இடம் என்பது தெரிந்தது.இதன் அடிப்படையில், ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 6ம் தேதி, மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, ஆவடி தாசில்தார் உதயம் தலைமையிலான வருவாய் துறையினர், 1.68 ஏக்கர் பரப்பில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த, ஒன்பது வணிக கட்டடங்களை, 'பொக்லைன்' இயந்திரம் உதவியுடன் நேற்று முழுமையாக இடித்து அகற்றினர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 150 கோடி ரூபாய்.