தீராத நெரிசலால் எழும்பூரில் தவிப்பு
சென்னை; எழும்பூரில் பிரதான சாலை சந்திப்பில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படாததால், வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர். எழும்பூரில், பாந்தியன் சாலை - ருக்மணி லட்சுமிபதி சாலை - காவலர் சாலை - ஆதித்தனார் சாலை என, பிரதான சாலை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் எதுவும் இல்லை. மேலும் அங்கு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான போலீசாரும் பணி அமர்த்தப்படுவதில்லை. இதன் காரணமாக, பாந்தியன் சாலையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கும், தமிழ்ச்சாலையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: எழும்பூரில், 'பீக் ஹவர்ஸ்' எனும் அலுவலக நேரங்களில், தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னையில் எங்கெல்லாம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து எந்த அளவிற்கு மெதுவாக செல்கிறது என்பது குறித்து, கட்டுப்பாட்டு அறையில் இருந்து சம்பந்தப்பட்ட உதவி கமிஷனருக்கு அனுப்பப்படும். உடனே, உதவி கமிஷனர் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டருக்கோ அல்லது அப்பகுதி எஸ்.ஐ.,க்கோ தகவல் தெரிவித்து போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் குறித்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் அனுப்பியும் அவற்றை கண்டுகொள்வதில்லை. இதன் காரணமாகவே, மணிக்கணக்காக நெரிசல் தொடர்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.