உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டு சுவர் கட்டுமான பணிக்கு தோண்டிய பள்ளத்தில் பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டு கண்டெடுப்பு ; எண்ணுார் அருகே பரபரப்பு

வீட்டு சுவர் கட்டுமான பணிக்கு தோண்டிய பள்ளத்தில் பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டு கண்டெடுப்பு ; எண்ணுார் அருகே பரபரப்பு

எண்ணுார், எர்ணாவூரில் வீட்டு மதில் சுவர் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டு ஒன்று துருப்பிடித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, மண்ணடியைச் சேர்ந்தவர் முஸ்தபா, 52. இவர், எர்ணாவூர், ராமகிருஷ்ணா நகர், 5வது குறுக்கு தெருவில் பழைய வீடு ஒன்றை வாங்கி, குடியேறுவதற்காக மராமத்து பணிகளை மேற்கொண்டு வருகிறார். இங்கு, வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பணி புரிகின்றனர்.இரு தினங்களுக்கு முன், வீட்டின் வலது பக்கம் மதில் சுவர் அமைப்பதற்காக, கட்டுமான தொழிலாளர்கள் பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது, ஒன்றரை அடி பள்ளத்தில், ராட்சத உரல் ஆட்டுக்கல் போன்ற அமைப்பில் துருப்பிடித்த மர்ம பொருள் கிடைத்துள்ளது.இது குறித்து, வீட்டின் உரிமையாளர் முஸ்தபாவிடம், தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கட்டுமான பணிகள் நடக்கும், ராமகிருஷ்ணா நகர் குடியிருப்பிற்கு நேற்று வந்த முஸ்தபா, மர்ம பொருளை பார்த்துள்ளார்.பின், அதை புகைப்படம் எடுத்து, வலைதளங்களில் விபரங்கள் சேகரித்துள்ளார். அதன்படி, வெடிப்பொருளாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழவே, எண்ணுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த எண்ணுார் போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான, ஆவடி வெடிகுண்டு பிரிவு அதிகாரிகள் அங்கு முகாமிட்டு பரிசோதித்தனர்.மேலும், திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளும், அங்கு முகாமிட்டுள்ளனர். விசாரணையில், கைப்பற்றப்பட்ட மர்ம பொருள், 1940களில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட, பீரங்கி குண்டாக இருக்கலாம் என, தெரிகிறது. அது 61 செ.மீ., நீளம், 16 - 20 கிலோ வரை எடை இருக்கும்.தற்போது, கட்டுமானம் நடைபெறும் இடமருகே, பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கும் காயலான் கடை இருந்துள்ளது. அங்கு, யாரேனும் வந்து எடைக்கு போட்டிருக்கலாம். காலபோக்கில், மண்ணில் புதைந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Yes your honor
மே 22, 2025 11:10

இவ்வளவு உயர மதில் சுவர் கட்ட என்ன தேவை இருக்கிறது. ஏதாவது பயிற்சிக் கூடமா அல்லது குடோனா?


புதிய வீடியோ