மாநகராட்சியின் 32 சேவைகளை வாட்ஸாப் வழியே பெற வசதி
சென்னை, சென்னை மாநகராட்சியின், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சொத்துவரி உள்ளிட்ட 32 வகையான சேவைகளை, 'வாட்ஸாப்' வாயிலாக பெறும் வசதியை, மேயர் பிரியா நேற்று துவக்கி வைத்தார். சென்னை மாநகராட்சியின் மக்களுக்கான சேவைகள், நம்ம சென்னை செயலி, https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளம் மற்றும் '1913' என்ற அழைப்பு மையம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் முதன் முறையாக, மாநகராட்சியின் பொதுமக்களுக்கான சேவைகள் அனைத்தையும், 'வாட்ஸாப்' வாயிலாக பெறும் வசதியை, ரிப்பன் மாளிகையில் நேற்று, மாநகராட்சி மேயர் பிரியா துவக்கி வைத்தார். மாநகராட்சி சேவையை பெற, 94450 61913 என்ற எண்ணிற்கு, 'ஹாய் அல்லது வணக்கம்' என, வாட்ஸாப்பில் பதிவிட வேண்டும். பின், மாநகராட்சி சேவைகளை, உரிய வழிகாட்டலுடன் உள்நுழைந்து பெறலாம். என்னென்ன சேவைகள்? பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்து வரி, தொழில் வரி செலுத்துதல், புகார் பதிவு, வர்த்தக உரிமம் செலுத்துதல், புதுப்பித்தல் ஆகிய சேவைகளையும் பெற முடியும். ஆவண பதிவிறக்கம், சமுதாயக்கூடம் முன்பதிவு, முதல்வர் படைப்பகம், நீச்சல் குளம் முன்பதிவு, செல்லப் பிராணிகளின் உரிமம் பதிவு, பொதுமக்கள் குறைதீர் சேவைகள், நகரமைப்பு தொடர்பான சேவைகள், விண்ணப்பங்கள் கண்காணிப்பு, வாடகை செலுத்துதல், கட்டுமான கழிவு உள்ளிட்ட, 32 வகையான சேவைகளை மக்கள் பெற முடியும். அத்துடன், 'வாட்ஸாப் ஷாட்புட்' வாயிலாக, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உரையாட முடியும். மண்டல அலுவலகம், வார்டு அலுவலகம், அருகில் உள்ள வசதிகள், பள்ளிகள், கழிப்பறைகள், பேருந்து நிறுத்துமிடங்கள், அம்மா உணவகம், மயான பூமி, சமுதாயக்கூடம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும் இடம் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளலாம். இதைத்தொடர்ந்து, பொழுதுபோக்குவரி, சுகாதார சான்றிதழ் சேவைகள், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், பதிவுத்துறை ஆகியவற்றின் சேவைகள் புதிதாக சேர்க்கப்படும் என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. வரி, வாடகையை எளிதில் செலுத்தலாம் வரி செலுத்த வசதியாக, மாநகராட்சி மண்டலங்கள், பகுதி மற்றும் வார்டு அலுவலகங்கள், குடிநீர் வாரிய அலுவலகம், மின்சார வாரிய அலுவலகம், இ-சேவை மையங்கள் உள்ளிட்ட இடங்களில், க்யூ.ஆர்., கோடு வசதி உருவாக்கப்பட்டு உள்ளது. அவற்றையும், மேயர் பிரியா நேற்று துவக்கி வைத்தார். மாநகராட்சி வணிக வளாக கடைகளில், வாடகைதாரர்கள் தனித்தனியாக வாடகை மற்றும் சரக்கு வரி செலுத்த வசதியாக, க்யூ.ஆர்., கோடு அச்சிட்ட அட்டைகளையும், மேயர் பிரியா வெளியிட்டார். நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், துணை கமிஷனர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி, பிரதிவிராஜ், வருவாய் அலுவலர் பானு சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.