திரைத்துறையில் பாடல்களைப் பாடி ரசிகர் பாட்டாளத்தை ஈர்த்துள்ள சித் ஸ்ரீராம் இசைக் கச்சேரி, நங்கநல்லுார் பவமான் அன்னதான டிரஸ்ட் நடத்தும் மார்கழி இசை விழாவில் களைகட்டியது.சென்னை, நங்கநல்லுாரில், பவமான் அன்னதான டிரஸ்ட் இயங்கி வருகிறது. இதன் சார்பில் அனுமன் ஜெயந்தி, மார்கழி மாதத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் இசைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, இந்தாண்டிற்கான இசைத் திருவிழா கடந்த, 31ம் தேதி நங்கநல்லுார், ஆஞ்சநேயர் கோவில் அருகிலுள்ள ராமமந்திரம் மண்டபத்தில் துவங்கியது.ஒவ்வொரு நாளும் கர்நாடக இசைப்பாட்டு, மேன்டலின், வீணை, புல்லாங்குழல், நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.நேற்றைய நிகழ்ச்சியாக, பிரபல கர்நாடக இசைக் கலைஞரும், பின்னணி பாடகருமான சித் ஸ்ரீராமின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது.விநாயகர் ஸ்லோகமான 'வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி' எனும் பாடலுடன் கச்சேரியை துவங்கினார்.பின், அருமையான சக்ரவாகம் ஆலாபனையோடு, சுகுணமுலே என்ற உருப்படியை, நிரவல் ஸ்வரத்தோடு பாடி அசத்தினார்.கல்யாணி ராகத்தில் வாசுதேவயானி பாடல், சாரமதி ராகத்தில் மோக்ஷமு கலதா, ஹம்சநாதம் ராகத்தில் அமைந்த பண்டுரீத்தி கோலு வியவையராமா மற்றும் காப்பி உள்ளிட்ட ராகங்களில் பல பாடல்களை பாடி, ரசிகர்களின் கைத்தட்டல்களையும் வரவேற்பையும் பெற்றார்.இந்த பாடல்களுக்கு பக்கவாத்தியமாக பாஸ்கர் வயலினும், பத்ரி சதீஷ்குமார் மிருதங்கமும், சுந்தர்குமார் கஞ்சீராவும் வாசித்தனர்.