மேம்படுத்தப்பட்ட சைதை அரசு மருத்துவமனையை விபத்து சிகிச்சை பிரிவாக மாற்ற சாத்தியக்கூறு ஆய்வு
சைதாப்பேட்டை: சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, 6 மாடி கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டதால், விபத்து சிகிச்சைக்கான தனி மருத்துவமனையாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, 1920ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த மருத்துவமனை, மூன்று ஆண்டுகளுக்கு முன் வரை, 7,500 சதுர அடி பரப்பில் செயல்பட்டது. தென்சென்னையில் இருந்து அவசர சிகிச்சைக்காக செல்வோர், இங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ராயப்பேட்டை அல்லது ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர். இந்நிலையில், அதே வளாகத்தில், 28.75 கோடி ரூபாயில், 68,923 சதுர அடி பரப்பில், 6 மாடி கொண்ட புதிய கட்டடம் கட்டி, செப்., மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது: புதிய கட்டடம், டெங்கு, மலேரியா, டி.பி., ரத்த பரிசோதனை கூடம், எலும்பு முறிவு, கர்ப்பப்பை மற்றும் பொது அறுவை சிகிச்சை பிரிவுகளுடன், 110 படுக்கை வசதிகளுடன் செயல்படுகிறது. தினமும், 600 வெளி நோயாளிகள் வந்த நிலையில், புதிய கட்டடத்திற்கு, 1,000க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். கை, கால் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்து வருகிறோம். மாரடைப்புடன் வந்தால், உயிர்காக்கும் மருந்து கொடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் வசதிகள் உள்ளன. இதனால், உயிர் இழப்புகளை தடுக்க முடியும். இவ்வாறு நிர்வாகம் கூறியது. சைதாப்பேட்டையில் இந்த மருத்துவமனையை ஒட்டி, அரசு மகப்பேறு மருத்துவமனை, கிண்டியில் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் தேசிய முதியோர் நல மருத்துவமனை உள்ளன. இதன் அருகில், கிங் ஆய்வக வளாகத்தில், குழந்தைகளுக்கான உயர் சிகிச்சை மருத்துவமனை வர உள்ளது. அடுத்தடுத்து சிறப்பு பிரிவு மருத்துவமனைகள் உள்ளதால், சைதாப்பேட்டையில் கட்டிய 6 மாடி புதிய மருத்துவமனையை, விபத்து சிகிச்சைக்கான தனி மருத்துவமனையாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.