ஸ்கை லிப்ட் தீயணைப்பு வாகனம் இல்லாததால் ஓ.எம்.ஆரில் தீ விபத்து, மீட்பு பணியில் தாமதம்
துரைப்பாக்கம், துரைப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒட்டி, சிறிய இடத்தில் துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வந்தது.அங்கு, மெட்ரோ ரயில் பாதை பணிக்காக இடம் கையகப்படுத்தியதால், 195வது வார்டு அலுவலக வளாகத்தில், 5,000 லிட்டர் நீர் கொள்ளளவு உடைய வாகனத்தை நிறுத்தவும், தீயணைப்பு வீரர்களுக்கு சிறிய அறையும் தற்காலிகமாக வழங்கப்பட்டு உள்ளது.தீயணைப்பு வீரர்கள் 17 பேர், சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர். போதிய இடவசதியின்றி அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.மேலும், செயற்கை சுவாச கருவிகள் உள்ளிட்ட தீயணைப்பு உபகரணங்கள் வைக்க இடம் இல்லாததால், தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் அவை வைக்கப்பட்டு உள்ளன.துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட ஓ.எம்.ஆரில் அடுக்குமாடி குடியிருப்புகள், ஐ.டி., நிறுவனங்கள் அதிகம். அங்கு எதாவது அசம்பவிதம் நடந்தால், 10 டயர் உடைய 'ஸ்கை லிப்ட்' தீயணைப்பு வாகனம் தேவை. ஆனால், துரைப்பாக்கம் நிலையத்தில் நிறுத்த இடம் இல்லாததால், அந்த வாகனம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தாம்பரம், கிண்டி, அசோக் நகர், கீழ்ப்பாக்கம் போன்ற தீயணைப்பு நிலையங்களில், 20 மாடிகள் வரை தீயை அணைக்கும் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடும் 56 மீட்டர் உயரம் உடைய 'ஸ்கை லிப்ட்' வாகனங்கள் உள்ளன.ஓ.எம்.ஆரில் தீ விபத்து நடந்தால், அங்கிருந்து 'ஸ்கை லிப்ட்' வாகனங்கள் வந்து சேர, ஒரு மணி நேரத்திற்கு மேலாகிறது. அதற்குள் பெரும் பொருட்செலவு ஏற்படுகிறது. துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கு, ஸ்கை லிப்ட் வாகனம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தீயணைப்பு வீரர்கள் கூறியதாவது:தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, இதர வாகனங்கள் நிறுத்தும் பொது இடத்தில், தீயணைப்பு வாகனம் நிறுத்துவதால், அதை எடுப்பது, திரும்பவும் நிறுத்துவதில் சிரமங்கள் உள்ளன.'ஸ்கை லிப்ட்' வாகனம் தர, நிர்வாகம் தயாராக உள்ளது. ஆனால் இடவசதி இல்லை. இடம் தேவை குறித்து, உயர் அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.