அலங்கார பொருள் கிடங்கில் தீ ரூ.10 லட்சம் பொருட்கள் நாசம்
புதுவண்ணாரப்பேட்டை: திருமண அலங்கார பொருட்கள் பாதுகாக்கப்படும் குடோன் தீப்பற்றி, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. புதுவண்ணாரப்பேட்டை, வீரராகவன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவர், திருமணத்திற்கான அலங்கார பொருட்களை வாடகைக்கு விற்பனை செய்து வருகிறார். அவற்றை பாதுகாக்க அதே பகுதியில் ஒரு கிடங்கு வைத்துள்ளார். நேற்று திடீரென கிடங்கில் தீ பற்றியது. தீ மளமளவென பரவி, கிடங்கில் இருந்த பொருட்கள் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தன. இதனால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து, 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அலங்கார பொருட்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும், போலீசார் வழக்கு பதிந்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.