| ADDED : நவ 24, 2025 02:40 AM
சென்னை: தடையை மீறி செயல்படும் கடைகளால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறி, 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மெரினா லுாப் சாலையில் மறியலில் ஈடுபட்டதால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மெரினா லுாப் சாலையில், கடந்தாண்டு ஆக., 12ம் தேதி நவீன மீன் அங்காடி திறக்கப்பட்டது. அதன் பின், லுாப் சாலையில் இயங்கி வந்த கடைகள் அனைத்தும் நவீன மீன் அங்காடிக்கு மாற்றப்பட்டன. சாலையில் விதிமீறி கடைகள் வைப்போர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது. இதனால், சிறிது காலம் சாலையில் மீன் விற்பனையில் ஈடுபடுவதை வியாபாரிகள் தவிர்த்து வந்தனர். மாநகராட்சியின் கண்காணிப்பு குறைவால், மீண்டும் பழையபடியே, வியாபாரிகள் லுாப் சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், அங்காடியில் உள்ள கடைகளில், மீன் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த 30க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகள், நேற்று காலை 9:40 மணியளவில் லுாப் சாலையில் மீன் கூடைகளை வைத்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மெரினா போலீசார், மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் சமரசம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.