உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெள்ளத்தில் மூழ்கும் மாதவரம் நெடுஞ்சாலை உயர்மட்ட மேம்பால சாலை அவசியம்

வெள்ளத்தில் மூழ்கும் மாதவரம் நெடுஞ்சாலை உயர்மட்ட மேம்பால சாலை அவசியம்

சென்னை வடகிழக்கு பருவமழை காலங்களில், வெள்ளத்தில் மூழ்கும் மாதவரம் நெடுஞ்சாலையில், உயர்மட்ட மேம்பாலச்சாலை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், வடகரை சந்திப்பில் துவங்கும் மாதவரம் நெடுஞ்சாலையின் ஒருபகுதி, மாதவரம் சின்ன ரவுன்டானா அருகே நுாறடிச்சாலையில் இணைகிறது. இந்த சாலை, 7 கி.மீ., நீளம் கொண்டது.இச்சாலை வழியாக, சென்னை, எண்ணுார் துறைமுகங்களுக்கு செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள்; மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, உரத்தொழிற்சாலை, காஸ் தொழிற்சாலைகளுக்கு அதிகளவில் டேங்கர் லாரிகள் வந்து செல்கின்றன.மாதவரம் நெடுஞ்சாலையின் ஒருபகுதி சென்னை மாநகராட்சி எல்லையிலும், மற்றொரு பகுதி திருவள்ளூர் மாவட்ட எல்லையிலும் உள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வடப்பெரும்பாக்கம் அருகே புழல் ஏரி உபரிநீர் கால்வாயை கடக்கும் வகையில், தரைப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.இங்கிருந்து நுாறடிச்சாலை சந்திப்பு வரை, 700 மீட்டர் துாரத்திற்கு வடகிழக்கு பருவமழை காலங்களில் இடுப்பளவுக்கு, வெள்ளநீர் தேங்குகிறது. இதனால், 10 நாட்களுக்கு மேல் போக்குவரத்து முடங்குவதால், சுற்றுப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. சுற்றுப்பகுதிகளில் உள்ள சிறு தொழில் நிறுவனங்கள், உணவு பொருட்கள் கிடங்குகளில் இருந்து, பொருட்களை சென்னைக்கு எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.மாதவரம் ரெட்டேரியில் இருந்து உபரிநீர் வெளியேற்ற கால்வாய் இல்லை. அங்கு திறக்கப்படும் நீர், மாதவரம் நெடுஞ்சாலையை கடந்து செல்லாமல் சூழ்ந்து கொள்வதே பிரச்னைக்கு காரணம். மேலும், மாதவரம் நெடுஞ்சாலை, அப்பகுதியில் தாழ்வாகவும் உள்ளது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, உயர்மட்ட மேம்பாலச்சாலை அமைத்து, ஒரு பகுதியை மஞ்சம்பாக்கம் சந்திப்பிலும், மற்றொரு பகுதியை மாதவரம் சின்ன ரவுன்டானா சந்திப்பிலும், நுாறடிச்சாலையில் இணைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர் வேலுவிடம் முறையீடு

கடந்த 2021ம் ஆண்டு, தி.மு.க., அரசு பொறுப்பேற்றபின் கொட்டிய மழையால், இச்சாலையில் போக்குவரத்து முடங்கியது. உயரமான கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் செல்ல முடியாமல் தத்தளித்தன. அப்போது, நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு, தன் காரில் சென்று சாலையை ஆய்வு செய்தார். அதன்பின், மழைநீர் கால்வாய் உள்ளிட்டவை கட்டுமானம் செய்யப்பட்டும், அதிக வெள்ளம் காரணமாக, அவை கைகொடுக்கவில்லை. இந்நிலையில், மாதவரம் நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலச்சாலை அமைக்க வேண்டும் என, மாதவரம் வடக்கு பகுதி தி.மு.க., செயலர் நாராயணன் தலைமையில், மாதவரம் தொகுதி மக்கள், நேற்று முன்தினம் அமைச்சர் வேலுவை சந்தித்து வலியுறுத்தினர். இதுகுறித்து விரிவான ஆய்வு செய்ய உள்ளதாக அமைச்சர் வேலு உறுதியளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ