மீனவர்கள் கொடுத்த பில் தொலைந்ததால் வெள்ள மீட்பு படகுகளுக்கு தொகை இழுபறி
சென்னை:கடந்தாண்டு பருவமழை வெள்ளத்தின்போது, மீட்பு பணியின்போது படகுகளை இயக்கிய மீனவர்களுக்கு உரிய தொகை, இன்னும் வழங்கப்படவில்லை. மீனவர்கள் வழங்கிய 'பில்' தொலைந்ததால், தொகையை விடுவிப்பதில் மீன்வளத் துறை இழுபறி செய்து வருகிறது. சென்னையில், கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பரில், வெள்ளம் மற்றும் புயல் மீட்பு பணிகளுக்கு, மீனவர்களிடம் இருந்து பைபர் படகுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. படகுகளை இயக்க, தலா இரண்டு பேர் வீதம் நியமிக்கப்பட்டனர். அந்த படகுகளுக்கும், அதை இயக்குவோருக்கும், மீன்வளத்துறை மற்றும் மாநகராட்சி வாயிலாக, வாடகை பணம் மற்றும் சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டது. இதற்காக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளுக்கு, நொச்சிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பைபர் படகுகள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தப்பட்டன. அதற்கான வாடகை பணம் மற்றும் சம்பளம், ஆறு மாதங்களாகியும் வழ ங்கவில்லை என, மீனவர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் ஜூன் 23ம் தேதி வெளியானது. தொடர்ந்து, ஒரு வாரத்திற்குள் மீட்புப் பணியில் ஈடுபட்ட படகுகளுக்கு வாடகை மற்றும் சம்பளம் செலுத்தப்படும் என, மீன்வளத்துறையின் அப்போதைய கமிஷனர் கஜலட்சுமி தெரிவித்தார். இதையடுத்து, மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட படகுகளுக்கு வாடகை மற்றும் சம்பளம், மீனவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது . ஆனால், முழு தொகை வழங்கவில்லை என, மீனவர்கள் குமுறுகின்றனர். இது குறித்து, வாடகை படகு ஓட்டிய மீனவர் பத்மநாபன் கூறியதாவது: மீட்பு பணியில் ஈடுபடும் பைபர் படகுகளுக்கு, நாள் ஒன்றுக்கு 4,000 ரூபாய்; படகு இயக்குபவருக்கு 1,300 ரூபாய் வழங்கப்படும் என்றனர். முதற்கட்டமாக, படகு உரிமையாளர்களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்பட்டது. படகு இயக்குபவருக்கு குறைவான தொகையே வழங்கப்பட்டுள்ளது. மீன் வளத்துறை அலுவலகத்தில் கேட்டால், 'நீங்கள் கொடுத்த பில் தொலைந்து விட்டது. புதிய பில் கொண்டு வாங்க' என்கின்றனர். கடந்த ஆண்டு கொடுத்த பில், இந்த ஆண்டு எப்படி வாங்க முடியும். ஒரு நாள் சம்பளமானாலும் உழைத்த பணம் எங்களுக்கு வர வேண்டும். அதிகாரிகளின் கவனக்குறைவுக்கு, மீனவர்கள் பலியாக முடியாது. எனவே, உரிய தொகை மீனவர்களுக்கு கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.