செம்மஞ்சேரி கால்வாயில் கரைபுரளும் வெள்ளம் செம்மொழி சாலை நீர்வழி பாதையில் தடை?
சென்னை:சென்னையில் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் ஒன்றாக, செம்மஞ்சேரி உள்ளது.காரணை, நாவலுார், சித்தாலப்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து வடியும் வெள்ளம், செம்மஞ்சேரி கால்வாய் வழியாக செல்கிறது.மூன்று திசைகளில் இருந்து மொத்த வெள்ளமும், இந்த கால்வாய் வழியாக, சோழிங்கநல்லுார் - மேடவாக்கம் செம்மொழி சாலையை கடந்து, ஒக்கியம்மடு செல்கிறது.இதற்காக, 30 அடி அகலத்தில் நீர்வழி தரைப்பாலம் உள்ளது. அதை, 60 அடியாக மாற்றும் பணி நடக்கிறது. மேலும், டோல்கேட் முதல் எல்காட் வரை, 800 மீட்டர் நீளத்தில், ஒரு மீட்டர் நீளம் வீதம், 12 இடங்களில் நீர்வழிபாதை உள்ளது.செம்மஞ்சேரி, சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம் பகுதியில், ஒன்றரை ஆண்டுக்கு முன் புதிய கல்வாய்கள் கட்டப்பட்டன. இதனால், வெள்ளம் வேகமாக செல்கிறது.ஆனால், செம்மொழி சாலையில் போதிய அகலம் இல்லாததால், வெள்ளம் மெதுவாக வடிந்து செல்கிறது. இதனால், செம்மஞ்சேரி கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு, அருகில் உள்ள காலிமனைகளில் தேங்கியது.மேலும், நுாக்கம்பாளையம் சாலையில் உள்ள மூடுகால்வாயில் கொள்ளளவு அதிகரித்ததால், அதில் இணைக்கப்பட்ட வடிகால்கள் வழியாக வெள்ளம் பின்னோக்கி பாய்ந்தது. நேற்று மாலை வரை இந்த நிலை நீடித்தது.செம்மொழி சாலை கால்வாய் விரிவாக்கம் பணி, 10 மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி வேகமாக நடந்தால், அடுத்த ஆண்டு பருவமழைக்கு, செம்மஞ்சேரி கால்வாயில் பாதிப்பு இல்லாமல் வெள்ளம் சீராக செல்லும் என, அதிகாரிகள் கூறினர்.